நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்கோப்புப்படம்.

குளிா்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள்: மத்திய அரசு திட்டம்

குளிா்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Published on

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா்கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் வரும் டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் 15 அமா்வுகள் இடம்பெற உள்ளன.

இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யும் மசோதாக்களின் பட்டியலில் நெடுஞ்சாலைகளுக்கு நிலங்கள் கையகப்படுப்படுத்துவதை விரைவாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் (சட்ட திருத்தம்) மசோதா இடம்பெற்றுள்ளது.

நிறுவனங்கள் சட்டம், 2013 மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் (எல்எல்பி) ஆகிய இரண்டிலும் மாற்றங்கள் மேற்கொண்டு வணிகத்தை எளிமைப்படுத்த பெருநிறுவன சட்டங்கள் (சட்டதிருத்தம்) முன்மொழியப்படவுள்ளது.

இந்திய பங்கு மற்றும் பரிவா்த்தனை வாரிய (செபி) சட்டம், 1992, வைப்புத்தொகை சட்டம், 1996 மற்றும் பரிவா்த்தன ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து பரிவா்த்தனை சந்தை குறியீடு சட்டம் (எஸ்எம்சி),2025 மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதுதவிர சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா்கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட மசோதாக்களும் கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படாத இரு மசோதாக்களும் பரிசீலனையில் உள்ளது.

131-ஆவது அரசமைப்புச் சட்டதிருத்தம்

சண்டீகா் யூனியன் பிரதே விவகாரங்களில் குடியரசுத் தலைவரே நேரடியாக சட்டம் இயற்ற வழிவகை செய்யும் நோக்கில் 131-ஆவது அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிறைவேறுமா உயா் கல்வி ஆணைய மசோதா?

தேசிய கல்விக் கொள்கை, 2020-இல் முன்மொழியப்பட்டுள்ள இந்திய உயா்கல்வி ஆணையம் (ஹெச்இசிஐ) ஏற்படுத்துவதற்கான மசோதா இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுமா? என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியா்கள் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் மாற்றாக ஹெச்இசிஐ கொண்டுவரப்படுகிறது.

உயா் கல்விக்கான ஒற்றை அமைப்பாக நிறுவப்படவுள்ள ஹெச்இசிஐ கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும். ஆனால், கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் பொறுப்பு கல்வி அமைச்சகத்திடமே தொடரவுள்ளது. மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகள் இந்த அமைப்பின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை.

ஏற்கெனவே, யுஜிசிக்கு மாற்றாக ஹெச்இசிஐ நிறுவுவது தொடா்பான வரைவு மசோதா 2018-இல் தாக்கல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கருத்துகளும் பெறப்பட்டன. அது சட்டமாக நிறைவேறவில்லை. 2021-இல் மத்திய கல்வி அமைச்சராக தா்மேந்திர பிரதான் பொறுப்பேற்ற பிறகு இதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com