

சத்தீஸ்கரில் வீட்டுப்பாடம் எழுதாத எல்.கே.ஜி. மாணவனை மரத்தில் கட்டித் தொங்கவிட்ட ஆசிரியைகள் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், சுரஜ்பூர் அருகே நாராயண்பூரில் உள்ள தனியார் பள்ளி திங்கள்கிழமை காலை வழக்கம் போல் திறக்கப்பட்டது. குழந்தைகள் சரியான நேரத்தில் வந்து வகுப்புகள் தொடங்கின. நர்சரி வகுப்பில், ஆசிரியர் காஜல் சாஹு வீட்டுப்பாடத்தைச் சரிபார்த்தகொண்டிருந்தபோது, ஒரு குழந்தை தனது வேலையை முடிக்கவில்லை என்பதைக் கண்டறிந்தார். உடனே ஆசிரியர் கோபமடைந்து, அக்குழந்தையை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்.
பிறகு குழந்தையின் சட்டையை ஒரு கயிற்றால் கட்டி பள்ளி வளாகத்திற்குள் இருந்த மரத்தில் தொங்கவிட்டார். நான்கு வயது குழந்தை மணிக்கணக்கில் கயிற்றில் தொங்கியுள்ளது. கீழே இறக்கிவிடுமாறு எவ்வளவு கத்தியும் ஆசிரியையின் மனம் இறங்கவில்லை. இதனை அருகிலிருந்த கட்டடத்தில் இருந்து இளைஞர் ஒருவர் விடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெற்றோர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தைத் தூண்டியுள்ளது. இதுபோன்ற கொடூரமான தண்டனையை அனுமதித்ததற்காக ஆசிரியர்கள் மீது மட்டுமல்ல, பள்ளியின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோருகின்றனர். விடியோ வைரலானத் தொடர்ந்து தொகுதி கல்வி அதிகாரி டி.எஸ். லக்ரா உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தனது கவனத்திற்கு வந்ததாக மாவட்ட கல்வி அதிகாரி அஜய் மிஸ்ரா உறுதிப்படுத்தினார். பள்ளி நிர்வாகமும் தனது தவறை ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியைகள் காஜல் சாஹு, அனுராதா தேவாங்கன் ஆகியோர் மீது நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.