

அயோத்தி கோவில் இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் சுயமரியாதைக்கான சின்னம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலின் கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், அயோத்தி ஸ்ரீபாலராமர் கோயில் பிரதான கோபுரத்தின் உச்சியில் 191 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டு தயாரிக்கப்பட்ட காவிக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏற்றிவைத்தார்
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட யோகி ஆதித்யநாத் பக்தர்கள் மத்தியில் பேசியதாவது:
“அயோத்தியின் ராமரின் பிரம்மாண்ட கோவிலின் கொடியேற்றம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். ராம பக்தர்களின் சார்பாக பிரதமர் மோடிக்கு இந்த நிகழ்வில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 500 ஆண்டுகளில் பேரரசுகளும், பல தலைமுறைகளும் மாறிவிட்டன. மாறாத ஒரே விஷயம் நம்பிக்கை. ஆர்எஸ்எஸ் தலைமைப் பொறுப்பேற்றபோது, 'நாங்கள் அயோத்திக்கு வந்து கோவில் கட்டுவோம். தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடுகளை எதிர்கொள்வோம்’ என்ற ஒரே ஒரு முழக்கம் மட்டுமே பரவலாக இருந்தது.
இந்த பிரமாண்டமான கோவில் 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் சுயமரியாதையின் சின்னமாகும். தர்மத்தின் ஒளி அழியாதது என்பதற்கும், ராம ராஜ்ஜியத்தின் கொள்கைகள் காலத்தால் அழியாதவை என்பதற்கும் இந்தக் கொடி சான்றாகும்.
2014 -ல் மோடி பிரதமரானபோது, கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் எழுந்த நம்பிக்கை, தற்போது பிரமாண்ட ராமர் கோவிலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காவி கொடி தர்மம், நேர்மை, உண்மை, நீதி மற்றும் தேசிய மதத்தைக் குறிக்கிறது.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.