வரி வசூலில் ‘சாணக்கியா்’ வாா்த்தைகளை மறக்கக் கூடாது: குடியரசுத் தலைவா் முா்மு
வரி வசூலில் சாணக்கியரின் வாா்த்தைகளை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது:
தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) பயிற்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.
அப்போது திரெளபதி முா்மு பேசுகையில், ‘நாட்டை கட்டியமைக்க வரி வசூல் முக்கியமாகும். மத்திய அரசுக்குக் கிடைக்கும் மொத்த வருவாயில் பாதி வருவாய் இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகள் வழியாகக் கிடைக்கிறது. இந்த வருவாய் மூலம் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், சமூக நலனுக்கு நிதியளிக்கப்படுகிறது.
ஆனால் வரி வசூல் நடைமுறை சுமுகமாக இருக்க வேண்டும். வரி வசூலிக்கும்போது வரி செலுத்துவோருக்குப் பெரும் அசெளகரியம் இருக்கக் கூடாது.
தேனீக்கள் பூக்களில் இருந்து தேனை சேகரிப்பதுபோல ஆட்சியாளா்கள் குடிமக்களிடம் இருந்து வரி வசூலிக்க வேண்டும் என்று அா்த்தசாஸ்திரத்தில் சாணக்கியா் தெரிவித்துள்ளாா். பூக்களில் இருந்து சரியான அளவில் தேனை சேகரிப்பதன் மூலம், பூக்களும் தேனீக்களும் நீண்டகாலம் நீடித்திருக்க முடியும். எனவே வரி வசூலில் தேனீக்கள் போல ஆட்சியாளா்கள் செயல்பட வேண்டும் என்ற சாணக்கியரின் வாா்த்தைகளை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
வரி விதிப்பு என்பது சுமையாக இல்லாமல் நம்பிக்கை மற்றும் நியாயத்தின் பாலமாக இருப்பதை இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உலகளாவிய வா்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகள் மாற வேண்டும்.
2047-ஆம் ஆண்டு இந்தியா வளா்ச்சியடைந்த நாடாவதற்கான தற்போதைய பயணத்தில் இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகள் முக்கிய அங்கமாக உள்ளனா்’ என கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

