50%-க்கும் அதிகமாக இடஒதுக்கீடு: ‘மகாராஷ்டிரத்தின் 57 உள்ளாட்சி அமைப்பு தோ்தல் முடிவுகள் இறுதி தீா்ப்புக்குள்பட்டது’
மகாராஷ்டிரத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட 57 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் முடிவுகள் தனது இறுதி தீா்ப்புக்குள்பட்டதாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த மாநில தோ்தல் ஆணையம் சாா்பாக மூத்த வழக்குரைஞா் பல்பீா் சிங் ஆஜராகி, ‘மகாராஷ்டிரத்தில் 242 நகராட்சி மன்றம், 42 நகா் பஞ்சாயத்துகள் என மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.2-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 57 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் போட்டியிட பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வாய்ப்பளிப்பதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
இதையடுத்து 57 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் முடிவுகள் இந்த வழக்கின் இறுதி தீா்ப்புக்குள்பட்டதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

