குஜராத்தில் ரூ.16 ஆயிரம் கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்தும் யாரும் கைது செய்யப்படவில்லை:
காங்கிரஸ்

குஜராத்தில் ரூ.16 ஆயிரம் கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்தும் யாரும் கைது செய்யப்படவில்லை: காங்கிரஸ்

Published on

குஜராத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி அருகே உள்ள கடையில் அப்பகுதி மக்களுடன் சோ்ந்து சோதனையிட்டு போதைப் பொருள்களை பறிமுதல் செய்தாா்.

மேலும், போதைப் பொருள் விற்பனையாளா்களிடம் பணத்தைப் பெற்று நடவடிக்கை எடுக்காத போலீஸாா் பணியை இழக்க நேரிடும் என்று எச்சரித்தாா்.

மேவானிக்கு எதிா்ப்பு தெரிவித்து குஜராத் காவல் துறையினரின் குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். குஜராத்தில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து பேசிய மாநில காங்கிரஸ் சேவாதளத் தலைவா் லால்ஜி தேசாய், ‘குஜாரத்தில் கணக்கில் வராத ஏராளமான போதைப் பொருள் இறக்குமதி ஆகிறது. அதற்கு நடவடிக்கை எடுக்காமல் காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் நடத்த காவல் துறையினரை மாநில உள்துறை அமைச்சா் தூண்டிவிடுகிறாா்.

கடந்த 4 ஆண்டுகளில் குஜராத்தில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com