அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? பிஆர் கவாய் நேர்காணல்!

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணல்...
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்ANI
Updated on
2 min read

அரசியல்வாதிகளால் அழுத்தங்கள் எதிர்கொண்டுள்ளீர்களா? என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பதிலளித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று அரசியலமைப்புச் சட்ட தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், புல்டோசர் நீதி, அரசியல் அழுத்தங்கள், கொலீஜியத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

”பல சந்தர்ப்பங்களில், குடிமக்கள், அவர்களின் சமூக - பொருளாதார குறைபாடுகள் காரணமாக, தங்கள் குறைகளைத் தீர்க்க, தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் நிலையில் இருப்பதில்லை.

அப்படிப்பட்ட சூழலில், அவர்கள் சார்பில் வேறொருவர் நீதிமன்றத்தை அணுக அனுமதிப்பது, நாட்டின் கடைசிக் குடிமகனுக்கும் பொருளாதார மற்றும் சமூக நீதி வழங்குவோம் என்ற நமது உறுதிமொழியை ஒருவகையில் நிறைவேற்றுவதாகும். ஆனால், நீதித்துறை செயல்பாடுகளுக்கு வரம்புகள் உள்ளன. நான் எப்போது சொல்வது போல், நீதித்துறை செயல்பாடு நீதித்துறை பயங்கரவாதமாக மாறிவிடக் கூடாது. நமது அரசியலமைப்பானது சட்டப்பேரவை, நிர்வாக அமைப்பு மற்றும் நீதித்துறைக்கு இடையேயான அதிகாரப் பிரிவினையை நம்புகிறது.

புல்டோசர் நீதி என்ற பெயரில் ஒரு குடிமகன் குற்றச் செயலில் ஈடுபட்டார் என்ற ஒரே காரணத்துக்காக நிர்வாகத் துறையினர் நீதிபதியாகச் செயல்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடித்தனர். இது அவரின் உரிமைகளையோ, குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளையோ மீறுவது மட்டுமல்ல, சட்டத்தை தன் கையில் எடுத்ததற்கு சமமாகும். இதுபோன்ற வழக்குகளில் நாங்கள் செய்ததைப் போன்று, குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டு நீதித்துறை செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.

எங்கெல்லாம் உரிமை மீறல் நடக்கின்றதோ, அங்கெல்லாம் உயர் நீதிமன்றங்களை கதவுகளைத் தட்ட குடிமக்களுக்கு நாங்கள் சுதந்திரம் அளித்தோம். அத்தகைய புகார்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தால், நீதிமன்ற உத்தரவுகளை மீறுபவர்களை நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்டவர்களாக கருதி கடுமையான நடவடிக்கைகளை வகுத்தோம். மேலும், சரியான நடைமுறைகளைப் பின்பற்றிய பிறகும் சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட வீடுகள் என்று கண்டறியப்பட்டால், அவற்றை அரசே மீண்டும் கட்ட வேண்டும், அதற்கான செலவை இடித்தவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டோம்.” எனத் தெரிவித்தார்.

இந்த நேர்காணலில், அரசியல்வாதிகள் அல்லது நிர்வாகத்துறையினரிடம் இருந்து எப்போதாவது எந்த வகையிலாவது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, “உண்மையிலேயே எந்த அழுத்தமும் கொடுக்கப்பட்டதில்லை” என்று பதிலளித்தார்.

கொலீஜியத்தின் வெளிப்படைத்தன்மை, காலணி வீச்சு சம்பவம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பி.ஆர். கவாய் பேசியதாவது:

“கொலீஜியம் வெளிப்படையானது. கொலீஜியத்தின் செயல்பாடுகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நான் நினைக்கிறேன். நீதிபதி கானா பதவியில் இருக்கும் போதிலிருந்தே விண்ணப்பதாரர்களுடன் நேரடியாக உரையாடத் தொடங்கினோம், எல்லா விண்ணப்பதாரர்களுடனும் உரையாடுவோம்.

நீதிபதிகள், நிர்வாகத்துறையினர், மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் சட்ட அமைச்சகம் போன்ற பல்வேறு தரப்புகளிடமிருந்து கருத்துகளையும் பெறுகிறோம். இவை அனைத்தையும் பரிசீலித்த பின்னரே கொலீஜியத்தால் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் காலணி வீசிய சம்பவம் நடந்தபோது, நான் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகளுக்கு தொடர்புடையது என்றுகூட எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்போது நான் விசாரித்துக் கொண்டிருந்த வழக்கை தொடர்ந்து நடத்தியே தீர வேண்டும் என்று நான் உணர்ந்தேன்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை பொறுத்தவரை, அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நீதித்துறையின் நற்பெயரை பாதித்துள்ளது என்பதை மறுப்பது தவறு. ஆனால் இப்போது இந்த வழக்கு நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது மற்றும் பதவி நீக்க நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதுபற்றி நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது.” என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார்.

Summary

Retired Chief Justice B.R. Gavai gave an interview to news agency ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com