ஈரோடு மாவட்டத்திற்கு முதல்வரின் 6 முக்கிய அறிவிப்புகள்!

ஈரோடு மாவட்டத்திற்கு முதல்வரின் 6 முக்கிய அறிவிப்புகள் பற்றி...
6 important announcements from mk stalin for Erode district
ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated on
2 min read

ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் 235 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 91 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 1,84,491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதன்பின்னர் ஈரோடு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் பேசினார்.

கடந்த ஆண்டு மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில், பொள்ளாச்சி மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் அறிவித்த 12 அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில் 79.83 கிலோமீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு எஞ்சியுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் டிசம்பர் 10-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் ஈரோடு மாவட்டத்துக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் செய்து தரப்பட்டுள்ள திட்டங்களில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

  • ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தை திறந்து வைத்திருக்கிறேன்.

  • ஜெயராமபுரத்தில், மாவீரன் பொல்லான் முழு திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமைத்து, அதை திறந்து வைத்துவிட்டுதான் இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன்.

  • ஈரோடு வட்டம், கங்காபுரம் கிராமத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. 

  • குறுங்குழுமம் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 

  • அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேம்பாட்டு பணிகளுக்காக இதுவரை 8 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.

  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில், 195 உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 177 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.  மீதமுள்ள 18 பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

  • ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய 4 இடங்களில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

  • நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு திட்டங்களின்கீழ், கடந்த நான்கரை ஆண்டுகளில், 944 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

  • 17 ஊரகப் பாலங்கள், 73 நெடுஞ்சாலைப் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 

  • ஈரோடு மண்டலத்தில், 400 திருக்கோயில்களில் 554 பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 150 திருக்கோயில்களில் 218 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது.

  • கடந்த நான்கரை ஆண்டு காலத்தில், 133 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

  • சத்தியமங்கலம் பால் குளிரூட்டு நிலைய வளாகத்தில் கட்டு ஊறுகாய் புல் தயாரிக்கும் அலகு அமைக்கப்பட்டு வருகிறது.

  • கரட்டுப்பாளையத்தில் விடுதியுடன் கூடிய ஜிம்னாஸ்டிக் அரங்கம் கட்டும் பணி நிறைவுற்று, துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்கான தேதி கேட்டு வந்தபோது நம்முடைய அமைச்சர் முத்துசாமி அந்தப் பகுதியில் நிறைய பேருக்கு பட்டா பிரச்சினை இருக்கிறது என்று ஒரு கோரிக்கையுடன் வந்தார்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்துக்குட்பட்ட 29 கிராமங்களில், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர், நில ஒப்படை வழங்கப்பட்ட சுமார் 6,000 ஏக்கர் பட்டா நிலங்களை, தமிழ்நிலம் பதிவேடுகளில் “நிபந்தனைக்குட்பட்ட பட்டா” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்கம் செய்து நிரந்தர பட்டாவாக மாற்ற அரசாணை வெளியிட்டுவிட்டு அந்த மனநிறைவோடு தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

இதன் மூலம் சுமார் 2 ஆயிரத்து 680 நில உடமைதாரர்கள் பயனடையப் போகிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு  நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரத்து 491 கோடி ரூபாய்க்கு 68 இலட்சத்து 85 ஆயிரத்து 232 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், 3 ஆயிரத்து 836 கோடி ரூபாயில், 19 ஆயிரத்து 488 வளர்ச்சி திட்டப்பணிகளும், 9 ஆயிரத்து 327 கோடி ரூபாய்க்கு செய்திருக்கிறோம்.

மேலும் இந்த ஈரோடு மாவட்டத்திற்கான ஆறு புதிய அறிவிப்புகளை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் அறிவிக்க விரும்புகிறேன்.

1. புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு, 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவிலும், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு, 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலும் புதிய நகராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.

2. பவானிசாகர் மற்றும் கீழ்பவானி நீர்ப்பாசனத் திட்டங்களின்கீழ், திட்ட நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களை, நிரந்தர பட்டாவாக மாற்ற வேண்டும் என்ற சத்தியமங்கலம், நம்பியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை மற்றும் ஈரோடு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைய ஏற்று,  இந்த 90 கிராமங்களில் உள்ள, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பட்டாக்கள், நிரந்தரப் பட்டாவாக மாற்றப்படும்.

3. அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை அமைக்கப்படும்.

4. சாயப்பட்டறைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உள்ள பல்வேறு வழக்குகள் மற்றும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து ஆராய, வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.

5. பெருந்துறையில் தற்போதுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 5 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.

6. அந்தியூர் மற்றும் எண்ணமங்கலம் வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களுக்கான பதிவேடுகளில் உள்ள நிபந்தனை பட்டாக்கள் அயன் பட்டாக்களாக மாற்றப்படும்" என்று பேசினார்.

Summary

Important announcements from mk stalin for Erode district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com