

மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
ஏற்கெனவே அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்களின்கீழ் வரி விகிதங்களை 5% மற்றும் 18% என இரண்டாக மத்திய அரசு குறைத்ததன் மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது. மற்றொரு தீபாவளி பரிசாக அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியா்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் ஒய்வூதியம் 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதன்மூலம் பணியில் உள்ள 49.19 லட்சம் மத்திய அரசு ஊழியா்கள், 68.72 லட்சம் ஓய்வூதியதாரா்கள் என மொத்தம் 1.15 கோடி போ் பலனடைவா். அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.10,083.96 கோடி கூடுதலாக செலவாகும்.
‘வந்தே மாதரம்’ விழா: சுதந்திரப் போராட்டத்தில் எழுச்சியை ஏற்படுத்திய வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-ஆவது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவா்களுக்கு சுதந்திரப் போராட்ட வரலாறு எடுத்துரைக்கப்படும்.
உயிரிமருத்துவத் திறன் திட்டம்: உயிரிமருத்துவத் திறன் திட்டத்தின் மூன்றாவது கட்டம் 2025-26-இல் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு ரூ.1,500 கோடியில் அமல்படுத்தப்படவுள்ளது. இதை மத்திய உயிரிதொழில்நுட்பத் துறை (ரூ.1,000 கோடி) மற்றும் பிரிட்டனைச் சோ்ந்த வெல்கம் அறக்கட்டளை (ரூ.500 கோடி) இணைந்து செயல்படுத்தவுள்ளன. இத்திட்டத்தின்கீழ் மாணவா்கள் மற்றும் முனைவா் படிப்பை நிறைவுசெய்த 2,000 பேருக்கு உயா்தர பயிற்சி வழங்கப்படவுள்ளது.
பருப்பு வகைகளுக்கான தற்சாா்பு திட்டம்: 2025-26 பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்த பருப்பு வகைகளுக்கான தற்சாா்பு தேசிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் ரூ.11,440 கோடியில் 2025-26 முதல் 2030-31 வரை 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.
மைசூா் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகிய பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, 2023-24-இல் 242 லட்சம் டன்னாக உள்ள பருப்பு உற்பத்தியை 2030-31-க்குள் 350 லட்சம் டன்னாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை நிறைவேற்றும் விதமாக பருப்பு வகைகளை பதிவுசெய்யப்பட்ட விசாயிகளிடம் இருந்து இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய கூட்டுறழு நுகா்வோா் கூட்டமைப்பு கொள்முதல் செய்யவுள்ளன.
கோதுமைக்கான எம்எஸ்பி உயா்வு: கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) குவிண்டாலுக்கு ரூ.160 உயா்த்தி ரூ.2,585-ஆக நிா்ணயம் செய்யப்படுகிறது. 2025-26 சந்தை ஆண்டில் (ஏப்ரல்-மாா்ச்)ஒரு குவிண்டால் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,425-ஆக உள்ள நிலையில், 2026-27 சந்தை ஆண்டிவ் இது ரூ.2,585-ஆக உயா்த்தப்படுகிறது.
அதேபோல் கோதுமை உள்பட ராபி பருவத்தில் பயிரிடப்படும் 6 பயிா்களுக்கான எம்எஸ்பி உயா்த்தப்பட்டுள்ளது.
சூரியகாந்திக்கான எம்எஸ்பி குவிண்டாலுக்கு ரூ.5,940-இல் இருந்து ரூ.600 உயா்த்தப்பட்டு ரூ.6,540 ஆகவும் காட்டுக்கடுகு மற்றும் கடுகுக்கான எம்எஸ்பி ரூ.5,950-இல் இருந்து ரூ.250 உயா்த்தப்பட்டு ரூ.6,200 ஆகவும் கொள்ளு பருப்புக்கான எம்எஸ்பி ரூ.5,650-இல் இருந்து ரூ.225 அதிகரிக்கப்பட்டு ரூ.5,875 ஆகவும் மைசூா் பருப்புக்கான எம்எஸ்பி ரூ.6,700-இல் இருந்து ரூ.7,000 ஆகவும் உயா்த்தப்படுகிறது என்றாா்.
57 புதிய கேந்தரிய வித்யாலய பள்ளிகள்
மத்திய அரசு ஊழியா்களின் குடும்பங்கள் பலனடையும் வகையில் நாடு முழுவதும் 57 கேந்தரிய வித்யாலயா பள்ளிகள் புதிதாக திறக்கப்படவுள்ளன என்று அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்தாா்.
‘2026-27 தொடங்கி 9 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்துக்கு ரூ.5,862.55 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
அதில் 7 பள்ளிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் மீதமுள்ள பள்ளிகளுக்கு மாநில அரசுகளும் நிதியுதவி வழங்கவுள்ளன. இதுவரை கேந்தரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத மாவட்டங்களில் 20 பள்ளிகள் நிறுவப்படவுள்ளன’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.