
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.
புது தில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு ரூ.100 நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டார்.
இந்த நாணயத்தில் பாரத மாதாவின் வரத முத்திரையில் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் உருவம் இடம்பெற்றுள்ளது. மேலும், 1963 ஆம் ஆண்டு குடியரசுத் தின விழா அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் சேவகர்கள் பங்கேற்றதும் இடம்பெற்றுள்ளது.
கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி பேசுகையில், “தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் ஒரு பண்டிகையான விஜயதசமியன்றுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்கு முன்பு, மகத்தான நாளில் ஆர்.எஸ்.எஸ். ஒரு அமைப்பாக நிறுவப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல” என்றார்.
அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அதன்பின்னர் அவர் குறித்து பேசுகையில், “ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழா போன்ற ஒரு சிறந்த நிகழ்வைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருப்பது நமது தலைமுறையின் சேவகர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.
இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் சேவைக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் பல லட்சக்கணக்கான சேவகர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் மதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவருக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.