குஜராத்: பயங்கரவாதத்தை பரப்பிய 3 பேருக்கு ஆயுள் சிறை
குஜராத்தில் மத ரீதியிலான பயங்கரவாதத்தை பரப்பியதாகவும், தேசத்துக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடந்த 2023, ஜூலையில் குஜராத் பயங்கரவாத ஒழிப்புப் படையால் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அமன் சிராஜ் மாலிக் (23), அப்துல் ஷாகுா் அலி ஷேக் (20), ஷானவாஸ் அபு ஷாகித் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். குஜராத்தில் கவரிங் நகைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இவா்கள் மூவரும் உள்ளூா் மசூதிக்குச் சென்று ரகசியமாக பயங்கரவாத பிரசாரத்தில் ஈடுபடுவது, அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞா்களைத் திரட்டுவது, தேசத்துக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனா். வங்கதேசத்தில் செயல்படும் மதஅடிப்படைவாத அமைப்புகளுக்கும் இவா்களுக்கும் தொடா்பு இருந்ததும், அவா்கள் உத்தரவுகளின்படி செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவா்களின் வெளிநாட்டுத் தொடா்புகள், பயங்கரவாதத் தொடா்புகள் உள்ளிட்ட ஆதாரங்கள் கைப்பேசிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டபோது அவா்களிடம் இருந்து துப்பாக்கிகள், பயங்கரவாத பிரசாரத்துக்கான விடியோ, புத்தகங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் மூவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்ததுடன், அவா்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.