
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால், அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஆப் ஸ்டோரில் களமிறக்கப்பட்டிருக்கும் அரட்டை செயலி, அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ்ஆப் செயலி, வெளிநாட்டிலிருந்து கட்டுப்படுத்தப்படுவதாகவும் பகிரப்படும் தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் ஆனால் அரட்டை செயலி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, இந்தியாவுக்குள்ளேயே சேமிக்கப்படும். மூன்றாம் நபரின் தலையீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம், இந்தியா மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்காவுக்கு எதிராக நாட்டு மக்களின் மனங்கள் மாறி வரும் நிலையில், இந்த அரட்டை செயலிக்கும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பலரும் இந்தியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்கு என்பதை பிரித்துப் பார்க்கவே முடியாது என்ற போதும், இன்றும் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள்கள் பலவும் அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டுத் தயாரிப்புகளாகவே இருக்கின்றன.
இந்த நிலைமையை மாற்றும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஸோஹோ நிறுவன தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ டெக் நிறுவனம், கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய அரட்டை செயலி மெல்ல மேம்படுத்தப்பட்டு, இன்று வாட்ஸ் ஆப் என்ற முன்னணி சமூக ஊடகத்துக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.
டிஜிட்டல் பாதுகாப்பு, தகவல் திருட்டுகளுக்கு பாய் பாய் சொல்லும் வகையில், இது நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் இதன் பயனர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
இதற்கு, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், வாட்ஸ்ஆப் செயலிக்கு மாறாக, உள்ளூர் செயலிகளுக்கு மக்கள் மாற வேண்டும் என்றும், அரட்டை செயலியை பயன்படுத்துங்கள் என்றும் கூறியிருந்தார்.
இது பரவலாக கவனம் பெற்று, இந்திய ஆப் ஸ்டோரில் வாட்ஸ்ஆப் பின்னுக்குத் தள்ளப்பட்டு அரட்டை முதலிடம் பிடித்து சாதனைப் படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க... அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்! என்னென்ன துறைகள் இயங்கும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.