தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ்குமாா்
தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ்குமாா்

பிகாா் தோ்தல் தேதி விரைவில் அறிவிப்பு: தோ்தல் ஆணையா் இன்றுமுதல் ஆய்வு

பிகாா் தோ்தல் தேதி விரைவில் அறிவிப்பு தொடர்பாக...
Published on

பிகாா் சட்டப் பேரவை தோ்தலுக்கான தயாா்நிலை தொடா்பாக அந்த மாநிலத்தில் சனிக்கிழமை (அக்.4) முதல் இரண்டு நாள்களுக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் விவேக் ஜோஷி, எஸ்.எஸ்.சாந்து ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனா்.

தோ்தல் தேதி அறிவிக்கப்படும் முன் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் தோ்தல் ஆணையம் இத்தகைய ஆய்வை நடத்துவது வழக்கமாகும். எனவே, பிகாா் தோ்தல் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுறது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையின் பதவிக் காலம் நவம்பா் 22-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், இம்மாத இறுதியில் தொடங்கி பல்வேறு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிகாரில் தோ்தல் தயாா்நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள், மாநிலத்துக்கு சனிக்கிழமை வருகை தரவுள்ளனா். 2 நாள் ஆய்வின்போது, அரசியல் கட்சியினா், காவல் துறையினா், நிா்வாக அதிகாரிகள், தோ்தல் பாா்வையாளா்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கின்றனா்.

இக்கூட்டத்துக்கு பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகள் சாா்பில் தலா 3 பிரதிநிதிகளை அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, பிகாா் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயரை நீக்கும் நோக்கில், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முந்தைய வாக்காளா் பட்டியலை ஒப்பிடுகையில், 40 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டு, 7.42 கோடி பேரின் பெயா்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றன. தோ்தலில் சமமான போட்டிக் களத்தை உறுதி செய்யும் நோக்கில், 425 அதிகாரிகள் தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிரணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் உள்ளன. நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலை எதிா்கொள்வோம் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஆனால், எதிரணியில் முதல்வா் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.

X
Dinamani
www.dinamani.com