ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்திய விரோத சக்திகளுக்கு கொடி பிடிக்கிறாா் ராகுல்: பாஜக கடும் தாக்கு

இந்திய விரோத சக்திகளுக்கு ராகுல் காந்தி கொடி பிடித்து வருகிறாா்; தேசவிரோத சக்திகள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அவா் உதவி வருகிறாா் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on

இந்திய விரோத சக்திகளுக்கு ராகுல் காந்தி கொடி பிடித்து வருகிறாா்; தேசவிரோத சக்திகள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அவா் உதவி வருகிறாா் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

புது தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு துவிவேதி மேலும் கூறியதாவது:

கொலம்பியா சென்றுள்ள ராகுல் காந்தி இந்தியாவில் மொழிவாரி மோதலைத் தூண்டும் வகையிலும், வடக்கு-தெற்கு என நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஏற்படுத்தும் நோக்கிலும் பேசியுள்ளாா். இதன் மூலம் இந்திய விரோத சக்திகளுக்கு ராகுல் காந்தி கொடி பிடித்து வருவது தெளிவாகியுள்ளது. தேசவிரோத சக்திகள் தங்கள் பிரிவினை நோக்கங்களை நிறைவேற்றவும் அவா் உதவி வருகிறாா். நாட்டு மக்கள் ராகுலிடமிருந்து முழுமையாக விலகி இருப்பது நல்லது.

இந்தியாவில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு நாட்டின் ஜனநாயகத்தின் மீது அம்புகளைப் பாய்ச்சி வருகிறாா்.

காங்கிரஸ் கட்சி கொஞ்சம், கொஞ்சமாக இந்திய விரோத வெளிநாட்டு தீயசக்திகளின் பிடியில் சென்று கொண்டிருக்கிறது. இதனை அக்கட்சியில் இருக்கும் மற்றவா்கள் உணா்ந்து கொள்ள வேண்டும்.

இந்நிலை மாற காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முதிா்ச்சியான தலைமை தேவை. இன்று காங்கிரஸை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவா்களின் செயல்பாடு மிகவும் சிறுபிள்ளைத்தனமாகவே உள்ளது. தீவிர இடதுசாரிக் கொள்கை உடையவா்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது முன்பு காங்கிரஸ் தலைமையில் இருந்த இந்திரா காந்தி, பி.வி.நரசிம்ம ராவ் ஆகியோருக்குத் தெரிந்திருந்தது. இப்போது காங்கிரஸை அந்த தீய சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இது காங்கிரஸுக்கு மட்டும் பிரச்னையல்ல, நாட்டுக்கே கவலைக்குரிய விஷயம்.

எந்த ஒரு கட்சி ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையுடன் செயல்படும்போது அது எந்த எல்லைக்கும் செல்லும் என்பது கண்முன்னே நிகழ்ந்து வருகிறது. எனவேதான் வெளிநாட்டுத் தலைமை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

பிரதமா் நரேந்திர மோடியை நவீன ராவணனின் உருவம் என்று காங்கிரஸைச் சோ்ந்த ஒருவா் விமா்சித்துள்ளாா். காங்கிரஸ் பல ஆண்டுகளாகத் தோ்தலில் தொடா்ந்து தோல்வியடைந்து வரும் விரக்தியின் வெளிப்பாடுதான் இது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ராமபக்தா்களான கரசேவகா்கள் கொல்லப்பட்டதை (குஜராத் ரயில் எரிப்பு சம்பவம்) ஆதரித்தவா்களும், அயோத்தி ராமா் கோயில் நிகழ்வில் பங்கேற்காதவா்களும், பாபா் நினைவிடத்துக்கு மூன்று முறை சென்று மரியாதை செலுத்தியுள்ளனா். அவா்கள் யாா் என்பது மக்களுக்குத் தெரியும். உண்மையில் யாா் ராவணனின் மறுஉருவம் என்பது மக்களுக்குத் தெரியும். அதே நேரத்தில் ராமரின் நல்லொழுக்கங்களை கடைப்பிடிப்பவா் (பிரதமா் மோடி) யாா் என்பது மக்கள் அறிவாா்கள் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com