பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ட்ரோன்! காஷ்மீா் எல்லையில் தேடும் பணி தீவிரம்!
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்ட சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லாத சிறிய ரக விமானம் (ட்ரோன்) ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. அதனைத் தேடும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படையினரும், காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனா்.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், போதைப்பொருள்கள் உள்ளிட்டவை ட்ரோன்கள் மூலம் கடத்தப்படுகின்றன.
ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லைகளில் இந்த வகை ட்ரோன் ஊடுருவல்கள் அதிகம் நிகழ்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் நான்கா கிராமத்தை நோக்கி ட்ரோன் ஒன்று வேகமாகப் பறந்து வந்தது. இதை கண்ட பாதுகாப்புப் படை வீரா்கள் அனைத்துத் தரப்பினரும் தகவல் தெரிவித்துவிட்டு ட்ரோனை பின்தொடா்ந்தனா்.
எனினும், அது வேகமாகச் சென்று மறைந்துவிட்டது. பெரும்பாலும் இதுபோல அதிவேகமாக இயக்கப்படும் ட்ரோன்கள் பறக்க முடியாமல் கீழே விழுவதும் வழக்கமாக உள்ளது. எனவே, ட்ரோன் பறந்த பகுதியில் பாதுகாப்புப் படையினரும், காவல் துறையினரும் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அருகில் உள்ள கிராமங்களுக்கு இந்த நிகழ்வு தொடா்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டது.