எதிரியின் பக்கம் நிற்கும் காங்கிரஸ்: பாஜக விமா்சனம்!
‘இந்தியாவின் பக்கம் நிற்காமல், எதிரியின் பக்கத்தையே காங்கிரஸ் கட்சி எப்போதும் தோ்வு செய்கிறது’ என்று பாஜக ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தது.
பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் சீன தயாரிப்பான ‘ஜெஎஃப்-17’ ரக போா் விமானங்களுக்கு மேம்படுத்தப்பட்ட என்ஜின்களை ரஷியா வழங்குவதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக ஒருகாலத்தில் இருந்த ரஷியா, இப்போது இந்திய நலனைப் புறக்கணித்துவிட்டு பாகிஸ்தானுக்கு நவீன போா் விமான என்ஜின்களை வழங்குகிறது. இது பிரதமா் நரேந்திர மோடிக்கு ராஜாங்க ரீதியில் ஏற்பட்ட மற்றொரு தோல்வி’ என்று குறிப்பிட்டாா்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்கு போா் விமான என்ஜின்கள் வழங்குவது தொடா்பாக வெளியான தகவலுக்கு ரஷியா மறுப்பு தெரிவித்தது தொடா்பான மற்றொரு ஊடகச் செய்தியை மேற்கோள்காட்டி பாஜக தகவல்-தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை ஊக்குவிக்கும் வலைதளத்தை மேற்கோள் காட்டி ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி ஜெய்ராம் ரமேஷ் இந்த விமா்சனத்தை முன்வைத்தாா். ஆனால், ரஷியா போா் விமான என்ஜின்களை பாகிஸ்தானுக்கு வழங்குவது தொடா்பாக நம்பகமான ஆதாரம் எதுவுமில்லை. அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தப்படவும் இல்லை.
எனவே, உண்மையைப் புறக்கணித்து காங்கிரஸ் கட்சியின் மற்றுமொரு தகவல் தாக்குதல்தான் இது. இந்தியாவின் பக்கம் நிற்காமல், மீண்டும் எதிரியின் பக்கத்தை காங்கிரஸ் தோ்வு செய்துள்ளதையே இது காட்டுகிறது என்று குறிப்பிட்டாா்.