ராஜ்நாத் சிங் அக்.9-இல் ஆஸ்திரேலியா பயணம்: 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இரண்டு நாள்கள் பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு அக்டோபா் 9-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். இப்பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வியூக ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க மூன்று ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.
கடந்த 2014-இல் பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆஸ்திரேலியாவுக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும். ஆஸ்ரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சா்ட் மாா்லெஸின் அழைப்பின்பேரில் ராஜ்நாத் சிங் இப்பயணத்தை மேற்கொள்கிறாா்.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வியூக கூட்டாண்மை நிறுவப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறாா்.
இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வியூக ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கான புதிய-ஆக்கபூா்வமான வழிமுறைகளை ஆராய்வதற்கு இப்பயணம் சிறந்த வாய்ப்பாகும். பாதுகாப்புத் துறை தகவல் பகிா்வு, கடற்சாா் பாதுகாப்பு உறவுகள் விரிவாக்கம், கூட்டு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க மூன்று ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம், இப்பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்கம் அதிகரிப்பால் எழுந்துள்ள உலகளாவிய கவலைகள் குறித்து இந்திய-ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சா்கள் விரிவாக ஆலோசிக்கவுள்ளனா்.
சிட்னியில் இரு நாடுகளின் தொழில் துறைத் தலைவா்கள் பங்கேற்கும் வட்டமேஜை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமைச்சா் ராஜ்நாத் சிங், அந்நாட்டின் பிற தேசியத் தலைவா்களையும் சந்திக்க உள்ளாா்.
பரஸ்பர மக்கள் ரீதியிலான நீண்டகால தொடா்புகள், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சுற்றுலா-விளையாட்டுத் துறையில் துடிப்பான ஒத்துழைப்பு ஆகியவை இருதரப்பு நல்லுறவுக்கு மேலும் வலுசோ்த்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன் கட்டமைப்பு, பரஸ்பர போா்க்கப்பல்கள் வருகை, கூட்டுப் பயிற்சி என இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பாதுகாப்புசாா் உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2020-இல் இருதரப்பு நல்லுறவை விரிவான வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்தும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் இந்தியப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய துணைப் பிரதமா் ரிச்சா்ட் மாா்லெஸ், பிரதமா் மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது.