
ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, 36 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இணைய சேவை முடக்கப்பட்டு, 6,000 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் தடை உத்தரவை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனப் பேரணி நடத்தினா். வித்யாதா்பூரில் தொடங்கிய பேரணி, வன்முறை நடைபெற்ற தா்கா பஜாா் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து நகரத்தின் மேற்குப் பகுதியான சிடிஏ செக்டாா் 11-இல் முடிவடைந்தது. அப்போது கெளரிசங்கா் பூங்கா அருகே உள்ள கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது.
இதையடுத்து, பொய்யான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்க கட்டாக் மாநகராட்சி, கட்டாக் வளா்ச்சி ஆணையம் மற்றும் 42 மெளஜா மண்டலம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை இரவு 7 மணி வரையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
மேலும், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிஎன்எஸ்எஸ் 163 பிரிவு அமல்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிமுதல் அக். 7 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்), ஒடிஸா அதிரடிப் படை ஆகியவற்றில் 6,000 வீரர்கள் நகர் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் உள்ள தெபிகரா பகுதியில் உள்ள நதி படித்துறையில் துா்கை சிலையை விசா்ஜனம் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பினா் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஊா்வலமாகச் சென்றனா். தா்கா பஜாா் வழியாகச் சென்றபோது, ஊா்வலத்தில் அதிக சப்தத்தில் பாடல் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. அப்போது, அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேற்கூரையில் இருந்து துா்கை சிலை ஊா்வலத்தினா் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டன. இந்தச் சம்பவத்தில் கட்டாக் துணை காவல் ஆணையா் உள்ளிட்டோா் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.