
மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் உண்மை கண்டறிய தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என மாநில அரசுக்கு பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா செய்தியாளர்களுடன் பேசியதாவது, ''பாஜக எம்.பி. ககன் முர்மு, மற்றும் எம்.எல்.ஏ. சங்கர் கோஷ் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டபோது அவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் எனக் கோருகிறோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு முன்பாக மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டு வருகிறது. எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டப்பேரவை உறுப்பினரைத் தாக்குவதன் மூலம் அவர்களை அச்சமடையச் செய்ய திரிணமூல் முயற்சி செய்கிறது.
ககன் முர்மு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் கண்களுக்கு கீழே உள்ள முகத்தின் எலும்புகள் உடைந்துள்ளன. தற்போது ஐசியூவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். முகத்தில் அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளும் நிலை ஏற்படலாம். அவரை எங்கள் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைப் பாா்வையிடுவதற்காகச் சென்ற பாஜக எம்.பி. ககன் முா்மு, பாஜக எம்எல்ஏ சங்கா் கோஷ் ஆகியோரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கற்களை வீசி நேற்று தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ககன் முர்முவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும்போது அவரின் கார் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தால் ஜல்பைகுரியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வை முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதையும் படிக்க | தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.