
எல்லா வரிகளும் கட்டுகிறோம், நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் கூட செலுத்துகிறோம், ஆனால், சாலைப் பள்ளங்கள் என்ற துயரம் மட்டும் தீர்வதேயில்லை என்று புலம்பும் கோடிக்கணக்கான மக்களுக்கு அவர்களுக்கு இருக்கும் பல உரிமைகள் தெரிவதேயில்லை.
அதாவது, சாலையில் இருக்கும் மிக மோசமான பள்ளத்தால், கீழே விழுந்து காயமடைந்தாலோ அல்லது வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ, நாம் அரசிடம் அது பற்றி முறையீட்டு நஷ்ட ஈடு கோருவதற்கு சட்டம் வழி வகுக்கிறது.
காரணம், நாம் ஏற்கனவே ஜிஎஸ்டி, சாலை வரி, எரிபொருள் வரி என அனைத்தையும் செலுத்துகிறோம், எனவே, சாலையால் ஏற்படும் சேதத்துக்கு மத்திய அரசு நஷ்ட ஈடு தர வேண்டும் என்பது சட்டம்.
சாலையில் பள்ளம் இருக்கலாம், ஆனால் பள்ளத்துக்கு நடுவில் கொஞ்சம் சாலை இருக்கிறது என்பது மக்கள் சொல்லும் நகைச்சுவை. ஆனால், பல இடங்களில் அது உண்மையாகவே இருக்கிறது. வெள்ளம் பள்ளம் இருந்தால் கூட பரவாயில்லை. சில சாலைகளில் மிகப்பெரிய கிணறுகளும் வாய்க்கால்களும் குட்டைகளும் கூட இருக்கிறது.
அதிலும் மழைக்காலம் வந்துவிட்டால் சாலைப் பள்ளங்கள், மக்களுக்கு மரணக் குழிகளாக மாறிவிடுகின்றன. போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தி விடுகின்றன.
எவ்வாறு புகாரை பதிவு செய்வது?
ஆதாரங்களைத் திரட்ட வேண்டும்.. சாலையில் இருந்த பள்ளத்தின் புகைப்படம், உங்கள் காருக்கு ஏற்பட்ட சேதத்தின் புகைப்படம், காரின் பதிவு எண் உள்ளிட்டவற்றை திரட்ட வேண்டும்.
இணையதளத்தில் பதிவு
நகராட்சி அல்லது பொதுப்பணித் துறையின் இணையதளத்துக்குச் சென்று புகார் அளித்து அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, நுகர்வோர் உதவி மையத்தின் Consumerhelpline.gov.in இணையதளத்துக்கு இது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். இதற்கு எந்த வழக்குரைஞர் உதவியும் தேவையில்லை.
வழக்குப் பதிவு
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ், நுகர்வோர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதில், காருக்கு ஏற்பட்ட சேதத்துக்கு எவ்வளவு செலவானதோ அதைக் குறிப்பிட்டு ஆயிரம் முதல் லட்சம் வரை இழப்பீடு கோரலாம். ஆனால் அது சேதத்துக்கான சரியான இழப்பீடாக இருக்க வேண்டும்.
இது குறித்து சட்ட வல்லுநர்கள் கூறுவது என்னவென்றால், பாதுகாப்பான, நன்கு பராமரிக்கப்பட்ட மற்றும் வாகனம் செல்லக்கூடிய சாலைகளுக்கான உரிமையை, மக்களுக்கு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-இன் கீழ் வாழ்க்கை உரிமையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை மேம்படுத்துவது, பராமரிப்பது உள்ளிட்டவை அரசின் நேரடி பொறுப்பு.
எனவே, ஒரு சாலையில் இருக்கும் பள்ளத்தால் காயமோ, வாகனத்துக்கு சேதமோ ஏற்படும்போது அரசு மீது அல்லது சம்பந்தப்பட்ட துறை மீது வழக்குத் தொடரலாம். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், கவனக்குறைவுக்கு தண்டனை அல்லது நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல சம்பவங்களில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள், இதுபோன்ற சாலைப் பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளுக்கு மத்திய அல்லது மாநில அரசுகளைப் பொறுப்பேற்கச் செய்திருக்கின்றன. அதற்கு உதாரணமாக, ராஜஸ்தான் மாநில அரசு - வித்யாவதி, எஸ். ராஜசேகரன் - மத்திய அரசு போன்ற முக்கிய வழக்குகள் இந்த உரிமையை உறுதிப்படுத்தியிருக்கின்றன.
சவால்கள் என்னென்ன?
பொதுவாக இதுபோன்ற வழக்குகள் விசாரித்து முடிக்க பல காலம் ஆகும். உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் ரிட் மனுக்கள் விரைவாக விசாரிக்கப்படும். சில வழக்குகள் ஒரு சில மாதங்களில் முடிவடையும்.
எந்த அரசுத் துறை பொறுப்பு என்பதை வரையறுப்பது.
அரசுத் துறையை கண்டுபிடித்தாலும் அவர்கள் தங்கள் பொறுப்பை ஒப்பந்ததாரர் மீது தட்டிக்கழித்துவிடுவர்.
நேரடியாக பள்ளம் - பாதிப்பை தொடர்புபடுத்தி உறுதி செய்வதில் சிக்கல்.
புகாரைப் பதிவு செய்ய
புகார் பதிவுக்கான இணையதளம் pgportal.gov.in
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் உமங் செயலியிலும் பதிவு செய்யலாம்.
சாலைகளில் பள்ளம் குறித்து மக்கள் அளிக்கும் புகார்கள் 8 நாள்களில் தீர்வு காணப்பட்டதாக வரலாறு உண்டு
இதையும் படிக்க... சென்னை ஒன் செயலியில் மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.