
குஜராத் முதல்வராக பதவியேற்ற தினத்தை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நன்றி தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வராக முதல்முறையாக கடந்த 2001 நவம்பர் 7 ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். அதன்பின்னர், தொடர்ந்து 14 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்த மோடி, 2014 ஆம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், முதல்முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்ற தினத்தை நினைவுகூர்ந்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:
"2001 ஆம் ஆண்டு இதே நாளில், நான் முதல் முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றேன். எனக்கு தொடர்ச்சியான ஆசீர்வாதங்களை அளித்து வரும் சக இந்திய மக்களுக்கு நன்றி. அரசாங்கத்தின் தலைவராக 25 ஆம் ஆண்டில் நுழைகிறேன். இந்திய மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், என்னை வளர்த்த இந்த மகத்தான தேசத்தின் முன்னேற்றத்துக்காகவும் பங்களிப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றேன்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில்தான் குஜராத் முதல்வர் பொறுப்பை என்னிடம் கட்சி ஒப்படைத்தது. அதே ஆண்டுல், மிகப்பெரிய நிலநடுக்கத்தால் குஜராத் மாநிலம் பாதிக்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் தீவிரப் புயல், வறட்சி மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை காணப்பட்டன. அந்த சவால்கள் மக்களுக்கு சேவை செய்யவும், புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் குஜராத்தை மறுகட்டமைப்பு செய்யவும் உறுதியை வலுப்படுத்தின.
நான் முதலமைச்சராக பதவியேற்றபோது, என் தாயார் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. உன் வேலை பற்றி எனக்கு அதிகம் புரியவில்லை, ஆனால் நான் இரண்டு விஷயங்களை மட்டுமே கூற விரும்புகிறேன். முதலாவது, நீ எப்போதும் ஏழைகளுக்காக உழைக்க வேண்டும்; இரண்டாவது, நீ ஒருபோதும் லஞ்சம் வாங்கக் கூடாது. நானும், என்ன செய்தாலும் அது சிறந்த நோக்கத்துடன், வரிசையின் கடைசியில் உள்ள நபருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை கொண்டிருப்பதாக மக்களிடம் தெரிவித்தேன்.
இந்த 25 ஆண்டுகள் பல அனுபவங்களால் நிரம்பியவை. ஒன்றிணைந்து, நாம் அற்புதமான முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, குஜராத் மீண்டும் உயர முடியாது என்று நம்பப்பட்டது. மக்கள், விவசாயிகள் உள்பட மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து புகார் கூறினர். விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது, தொழில்துறை வளர்ச்சி சரிவடைந்திருந்தது. அத்தகைய சூழலில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து குஜராத்தை நல்லாட்சியின் ஆற்றல் மையமாக மாற்றினோம்.
வறட்சி மாநிலமாக இருந்த குஜராத், விவசாயத்தில் முன்னணி மாநிலமாக மாறியது. வலுவான தொழில்துறை மற்றும் உற்பத்தி மாநிலமாக வணிக கலாசாரம் விரிவடைந்தது. வழக்கமான பிறப்பிக்கப்படும் ஊரடங்கு உத்தரவுகள் கடந்த காலமாகின. சமூக உட்கட்டமைப்புகள் மேம்பாட்டது. மக்களுடன் இணைந்து இந்த பலன்களை அடைவது மிகவும் திருப்திகரமாக இருந்தது.
2014 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் பொறுப்பு எனக்கு 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், நாட்டு மக்கள் நம்பிக்கையை இழந்திருந்தனர். ஆளுமைக்கான நெருக்கடியை சந்தித்திருந்தனர். அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது ஊழல், நண்பர்களுக்கு ஆதரவு மற்றும் கொள்கை முடக்கத்தின் அரசாக இருந்தது. உலக அரங்கில் இந்தியா பலவீனமான நாடாக கருதப்பட்டது. இதனால், மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு எங்கள் கட்சியை பெரும்பான்மையுடன் இந்திய மக்கள் வெற்றி பெற வைத்தார்கள்.
கடந்த 11 ஆண்டுகளில், இந்திய மக்களுடன் ஒன்றிணைந்து பல மாற்றங்களை அடைந்துள்ளோம். நமது புரட்சிகர முயற்சிகள் இந்தியா முழுவதும் உள்ள மக்களை மேம்படுத்தியுள்ளன. 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உலகின் முக்கிய பொருளாதாரங்களில் இந்தியா ஒரு பிரகாசமான இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு நாம் முன்னோடியாக உள்ளோம். நமது விவசாயிகள் புதுமைகளை மேற்கொண்டு, நமது நாடு சுயசார்பு அடைவதை உறுதிப்படுத்தியுள்ளனர். நாம் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம், இந்தியாவை அனைத்து துறைகளிலும் தற்சார்பு பெற்றதாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்திய மக்களின் தொடர் நம்பிக்கை மற்றும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். நம் அன்பிற்குரிய நாட்டிற்கு சேவை செய்வதே மிக உயரிய கௌரவம். நமது அரசியலமைப்பை எனது வழிகாட்டியாகக் கொண்டு, ’வளர்ந்த பாரதம்’ என்ற அனைவரின் கனவையும் நனவாக்க வரவிருக்கும் காலங்களில் இன்னும் கடினமாக உழைப்பேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.