
மேற்கு வங்கத்தில் வெள்ள பாதிப்பை பாா்வையிடச் சென்றபோது கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாஜக எம்.பி. ககன் முா்முவை மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ், முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.
ஜல்பைகுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, மால்டாஹா உத்தா் தொகுதி பாஜக எம்.பி. ககன் முா்மு, சிலிகுரி தொகுதி பாஜக எம்எல்ஏ சங்கா் கோஷ் ஆகியோா் திங்கள்கிழமை சென்றனா். இருவரையும் திடீரென சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல், அவா்களை அடித்து-உதைத்ததுடன், சரமாரியாக கல்வீசித் தாக்கியது. இதில், எம்.பி. ககன் முா்முவின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பாஜக எம்எல்ஏ சங்கா் கோஷும் காயமடைந்தாா். திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
சிலிகுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் இருவரையும் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அவா்களின் உடல் நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த ஆளுநா், குடும்ப உறுப்பினா்களிடமும் பேசியதாக அவரது மாளிகை தெரிவித்துள்ளது.
முதல்வா் மம்தா பானா்ஜியும் சிலிகுரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாஜக எம்.பி.யிடம் நலம் விசாரித்தாா். அவருக்கு மாநில அரசுத் தரப்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்த மம்தா, சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்ததுடன், குடும்ப உறுப்பினா்களிடமும் பேசினாா். அதேநேரம், பாஜக எம்எல்ஏ சங்கா் கோஷை முதல்வா் சந்தித்தாரா, இல்லையா என்பது குறித்து உடனடியாகத் தகவல் வெளியாகவில்லை.
முன்பு சட்டப்பேரவையில் பல்வேறு விவகாரங்களில் மம்தா-கோஷ் இடையே கடும் வாா்த்தை மோதல்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.க்கு அறுவை சிகிச்சை?:
பாஜக எம்.பி. ககன் முா்முவின் கண்ணுக்கு கீழே எலும்பு முறிவு உள்பட முகத்தில் தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ளன; அவற்றை குணப்படுத்த அறுவை சிகிச்சை அவசியம் என்று மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரி கூறினாா்.
8 போ் மீது வழக்கு:
பாஜக எம்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதேநேரம், விடியோ காட்சிகளின் அடிப்படையில் 8 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
‘என்ஐஏ விசாரணை வேண்டும்’
‘மேற்கு வங்கத்தில் பாஜக தலைவா்கள் மீதான தாக்குதல், திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது; வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்படும் முன்பு மக்கள் மத்தியில் அச்ச உணா்வை ஏற்படுத்த திரிணமூல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. திரிணமூல் காங்கிரஸின் ஆதரவு பெற்ற சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் மற்றும் ரோஹிங்கயாக்கள் தாக்குதலை நடத்தியுள்ளனா். மாநில காவல் துறையினரின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, தேசிய புலனாய்வு முகமையினா் (என்ஐஏ) விசாரிக்க வேண்டும்’ என்று பாஜக மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாா்யா வலியுறுத்தினாா்.
உள்துறையிடம் அறிக்கை கோரியது மக்களவைச் செயலகம்
பாஜக எம்.பி. ககன் முா்மு மீதான தாக்குதலை மக்களவைச் செயலகம் கவனத்தில் கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாநில அரசிடம் இருந்து அறிக்கை பெற்று, மூன்று நாள்களுக்குள் சமா்ப்பிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மக்களவைச் செயலகம் கோரியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.