நீதிபதி மீது தாக்குதல்: அன்று நீதிமன்றம் சென்றது ஏன்? வழக்குரைஞரின் அதிர்ச்சியூட்டும் பதில்

நீதிபதி மீது காலணி வீச்சு சம்பவம் நடந்த அன்று நீதிமன்றம் சென்றது ஏன்? என்பது குறித்து வழக்குரைஞர் சொன்ன அதிர்ச்சி பதில்
நீதிபதி மீது தாக்குதல்: அன்று நீதிமன்றம் சென்றது ஏன்? வழக்குரைஞரின் அதிர்ச்சியூட்டும் பதில்
ANI
Published on
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், அன்றைய தினம் நீதிமன்றம் சென்றது ஏன் என்பது குறித்து உரிய பதிலளிக்க முடியாமல் திணறினார்.

மேலும், இவ்வாறு செய்யுமாறு பரமாத்மாதான் சொன்னார், பரமாத்மா சொன்னதைத்தான் செய்தேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

வழக்குரைஞர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் ராகேஷ் கிஷோர், ஊடகங்களிடம் பேசுகையில், தன்னுடைய செயலுக்கு எந்த வருத்தமும் அடைந்தது போல தெரியவில்லை.

கடந்த திங்கள்கிழமை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவத்தில் ஈடுபட முயன்ற வழக்குரைஞரை, நீதிமன்ற காவலர்கள் தடுத்து நிறுத்தி வெளியே அழைத்துச் சென்றனர். நேற்று காலை அவரது வீட்டு முன் ஏராளமானோர், இந்த சம்பவத்துக்குக் கண்டம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

ஆனால், ராகேஷ் கிஷோரின் இந்த செயல்பாடு, அவரது அக்கம் பக்கத்தினருக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. காரணம் அவர்களில் பலரும், ராகேஷின் மோசமான செயல்பாடுகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்களாம்.

ஷஹ்தாரா நீதிமன்றம் மற்றும் தில்லி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்குரைஞராக பணியாற்றி வரும் ராகேஷ், நீதிபதி மீது காலணி வீசியதை, தான் கடவுள் சொன்னதைத்தான் செய்தேன் என்று கூறியிருப்பதுதான் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அன்றைய தினம், நீதிமன்றத்துக்கு ஏன் சென்றீர்கள் என்று ஊடகத்தினர் கேட்கும்போது, இறைவன்தான் சொன்னார் என்றும், ஒருவேளை, பரமாத்மா மீண்டும் என்னை அவ்வாறு செய்யச் சொன்னால் மீண்டும் அதைச் செய்வேன் என்று, ஏற்கனவே தான் செய்த செயலுக்கு எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தாமல் கூறுகிறார்.

அவர் வாழும் பகுதியில் ஏற்கனவே பலரும் இவரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், காவல்நிலையத்தில் பலர் இவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து வாட்ஸ்ஆப் குழுவை நடத்தி வருவதாகவும், அதில் மதம் மற்றும் சமூகம் தொடர்பான தகவல்களையே அவர் அனுப்பி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com