
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்த மத்திய அரசு, கேரள மக்களைத் தோல்வியடையச் செய்ததாக கேரள உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் வயநாட்டில் 2024-ல் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து, மத்திய அரசின் மீது கேரள உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ``கேரள மக்களைத் தோல்வியடையச் செய்துவிட்டதாக மத்திய அரசிடம் கூறுங்கள்.
இந்த பிரமாணப் பத்திரத்தின் மூலம், நீங்கள் இந்த அதிகாரத்துவ பேச்சின் பின்னால் ஒளிந்து கொண்டு, `நீங்கள் செயல்பட சக்தியற்றவர் என்று கூறுகிறீர்கள்’ என்பதை மீண்டும் தெளிவாகக் காட்டியுள்ளீர்கள்.
இது வெறும் அதிகாரத்துவப் பேச்சு. மத்திய அரசு செயல்பட முடியுமா என்பது முக்கியமல்ல; அவர்கள் செயல்படத் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம். ஆனால், நீங்கள் செயல்பட விரும்பவில்லை. அதைத் தைரியமாகச் சொல்லுங்கள்; யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள்?
அவர்களுக்கு தைரியம் இருந்தால், உதவத் தயாராக இல்லை என்று சொல்லட்டும். ஆனால், இதுபோன்ற சமயங்களில் மக்களை மத்திய அரசு தோல்வியடையச் செய்துள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதனைச் சமாளிப்பது எப்படி என்று எங்களுக்கு தெரியும். மத்திய அரசின் உதவி எங்களுக்கு தேவையில்லை. அதிகாரப் பிரிவினைக் கொள்கையை மதிக்குமாறு நமது அரசியலமைப்பு கூறுவதால், மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க மாட்டோம். ஏனெனில் நமது பெருந்தன்மை, அரசியலமைப்பை மதிக்கும் மாநிலம் என்பதாலும்தான் என்று தெரிவித்தனர்.
மேலும், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் பெற்ற கடன்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்ய வங்கிகள் தயாராக உள்ளனவா? என்பதை விளக்கும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வாதத்தின்போது, 2024-ல் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குஜராத் மற்றும் அஸ்ஸாமுக்கு மத்திய அரசு ரூ. 707 கோடியை அனுமதித்ததாக செய்தித்தாள்களில் வெளியான செய்திகளையும் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது. கடுமையான வெள்ளம் அல்லது நிலச்சரிவு என்று வகைப்படுத்தப்படாதவற்றுக்கு ரூ. 707 கோடி ஒதுக்கப்பட்டது என்று கூறியது.
அதுமட்டுமின்றி, தீயணைப்பு சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின்கீழ் ஹரியாணா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானுக்கு ரூ. 903.67 கோடியை ஒப்புதல் அளித்ததையும் மேற்கோள் காட்டினர்.
இதையும் படிக்க: 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் வானில் பறந்துள்ளனர்: பிரதமர் மோடி பெருமிதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.