
மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்தால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' எனும் இருமல் மருந்தை எடுத்துக்கொண்ட குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெயிண்ட், மை, ரெசின், டை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைகால் எனும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் அதிகமாக(48.6%) கலக்கப்பட்டுள்ளதும் அது குழந்தைகளிடையே சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டில் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் ஸ்ரீசென் பார்மா நிறுவனம் மூடப்பட்டுள்ளதுடன் சிறப்பு புலனாய்வு குழுவினரால் நிறுவனத்தின் உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் 2 குழந்தைகள் நேற்று இறந்தனர். சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த விஷால்(5), சூர்யவன்ஷி(4) ஆகிய 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சில குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
தற்போதுவரை இறந்தவர்களில் 19 குழந்தைகள் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் பெதுல், ஒருவர் பந்தூர்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுதவிர ராஜஸ்தானில் இரண்டு குழந்தைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2 மருந்துகளுக்குத் தடை!
குழந்தைகள் இறப்பைத் தொடர்ந்து மற்ற இருமல் மருந்துகளும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் இரண்டு இருமல் மருந்துகளில் டைஎத்திலீன் கிளைகால் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
'ரீ லைஃப்'(ReLife) மற்றும் 'ரெஸ்பிஃபிரெஷ்'(Respifresh) ஆகிய இரு மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட டைஎத்திலீன் கிளைகால் இருப்பது தர பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இந்த இரு மருந்துகளுக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் இந்த 2 மருந்துகளுக்கும் தடை விதித்து வருகின்றன.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.