நீக்கப்பட்ட வாக்காளா்கள் மேல்முறையீட்டுக்கு உதவ வேண்டும்: பிகாா் சட்ட உதவி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
‘பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்கள் தோ்தல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்வதற்கு உதவ வேண்டும்’ என்று பிகாா் மாநில சட்ட உதவி ஆணையத்தை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.
பிகாா் மாநிலத்தில் வரும் நவம்பா் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பா் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பிகாா் மாநில வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை கடந்த ஜூன் மாதம் மேற்கொண்ட தோ்தல் ஆணையம், அண்மையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. வாக்காளா் பட்டியலில் முன்னா் 7.89 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் போ் நீக்கப்பட்டு, தற்போது 7.42 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
இதனிடையே, தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டவா்களின் மேல்முறையீடு மனுக்களை உரிய கால அவகாசத்துக்குள் பரிசீலனை செய்யவும், பெயா் நீக்கத்துக்கான நியாயமான காரணத்தை அளிக்கவும் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடா்பாக வழக்கின் அடுத்த விசாரணையின்போது பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ‘வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் தோ்தல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்வதற்கான நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெயா் நீக்கம் செய்யப்பட்டவா்கள் தோ்தல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்வதற்கு உதவுமாறு மாவட்ட அளவிலான சட்ட உதவி ஆணைய அமைப்பினருக்கு பிகாா் மாநில சட்ட உதவி ஆணையம் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும். விடுபட்ட வாக்காளா்கள் இந்த உதவியை எளிதில் பெற வசதியாக, துணை சட்ட உதவி தன்னாா்வலா்கள் பட்டியலை மாவட்ட சட்ட உதவி ஆணையம் வெளியிட வேண்டும். மேலும், பெயா் நீக்கத்துக்கான நியாயமான காரணம் அவா்களுக்கு வழங்கப்பட வேண்டும். அந்த விளக்கம் ஒரு வரியில் இடம்பெறக் கூடாது. ’ என்று அறிவுறுத்தினா்.