
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பக்லா பாரி கிராமத்தில் வியாழக்கிழமை பலத்த சப்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்தில் வீடு இடிந்து 5 போ் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். காயமடைந்தோருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இடிபாடுகளில் மேலும் பலா் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. விபத்து நிகழ்ந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.
வெடி விபத்துக்கான காரணம் முழுமையாகத் தெரியாத நிலையில், அருகில் உள்ள கிராமங்களில் காவல் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் சோதனை நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியா் நிகில் திகாராம் ஃபண்டே தெரிவித்தாா்.
வெடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்த உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.