
ஆந்திரத்தில் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் ரூ.550 கோடி மதிப்பிலான புகையிலை எரிந்து நாசமானது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புகையிலை தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 11,000 டன் புகையிலை எரிந்து நாசமானதாக தொழிற்சாலை நிர்வாகம் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புகையிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட ரூ.550 கோடி மதிப்பிலான புகையிலை எரிந்து நாசமானது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், அப்பகுதியில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறி வருகிறது.
தகவல் கிடைத்தவுடன் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். ஐந்து தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, புகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிரகாசம் மாவட்ட கண்காணிப்பாளர் வி. ஹர்ஷவர்தன் ராஜு, தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து விரைவில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், சரியான காரணத்தைக் கண்டறியவும், இழப்புகளை சரிபார்க்கவும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.