
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியா வந்திருக்கும் நிலையில், புது தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் ஊடகவியலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அங்கு பெண் ஊடகவியலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எடுக்கப்பட்ட விடியோக்களில் ஒரு பெண் செய்தியாளர்கூட இல்லாதது விவாதத்துக்குரியதாக மாறிய நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்த சம்பவத்துக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
அவருடைய எக்ஸ் பக்கத்தில், ஆப்கானிஸ்தானின் அமைச்சர் அமீர் கான் முத்தகி உரையாற்றிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு பெண் பத்திரிகையாளர்கள் தடை செய்யப்பட்டது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆண் பத்திரிகையாளர்கள், பெண் சகாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த அறிந்த உடனே ஆப்கன் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை அவர்கள் கோரி வருகின்றனர். இதனிடையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவுகள் கடந்த சில மாதங்களாக மேம்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்த சந்திப்பின்போது, இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையே இருநாட்டு தூதரக உறவு, வணிகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்திருக்கும் இவர் 6 நாள்கள் இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு துறையினரையும் சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வருகையின்போது, தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை இந்தியா வெள்ளிக்கிழமை வெளியிட்டது. டு, அந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை மீண்டும் புதுப்பிக்கவும் இந்தியா தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
முன்னதாக, தலிபான் அமைச்சர் அமிர் கான் முத்தாகி கடந்த ஆக்ஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் அவர் பயணம் செய்ய தடை விதித்திருந்ததால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... டிராய் என்ற பெயரில் வரும் ஆள்மாறாட்ட ஐவிஆர் அழைப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.