டிராய் என்ற பெயரில் வரும் ஆள்மாறாட்ட ஐவிஆர் அழைப்புகள்!

டிராய் என்ற பெயரில் ஆள்மாறாட்டம் செய்து ஐவிஆர் அழைப்புகள் வருகின்றன என்பது பற்றி..
டிராய் பெயரில் மோசடி
டிராய் பெயரில் மோசடி
Published on
Updated on
2 min read

டிராய் என்ற பெயரில், ஆள்மாறாட்டம் செய்து, தனிநபர்களை செல்போனில் அழைத்து, அவர்களது செல்போன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக செல்போன் எண் முடக்கப்படும் என அச்சுறுத்தும் மோசடிகள் நடக்கின்றன.

ஒரு அழைப்பு வருகிறது. அதில், டிராய் என்று புகைப்படம் தெரிந்தால், நிச்சயம் அது உண்மையான டிராய் அமைப்பிடமிருந்து தான் வருகிறது என எவரும் கருதுவர். சில டிராய் அழைப்புகள் சந்தேகம் வராத வகையில் பதிவு செய்யப்பட்ட குரல் அழைப்புகளாக அதாவது ஐவிஆர் அழைப்புகளாக இருக்கிறது.

அந்த அழைப்பில், உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று யாராவது சொன்னால், கேட்பவர்களுக்கு என்னத் தோன்றும்?

யாராவது நம்முடன் விளையாடுவார்கள் என்றா? அல்லது இவர்கள்தான் மிகப்பெரிய மோசடியாளர்களாக இருப்பார்கள் என்றா?

நிச்சயம் இருக்காது. முதலில் பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மூளை தடுமாறும். அவ்வளவுதான், இந்த பதற்றத்தைத்தான் சைபர் மோசடியாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அதாவது, சைபர் மோசடியாளர்கள் டிராய் அதிகாரிகளைப் போல தங்களை அடையாளம் காட்டி, தனிநபர்களிடம் பேசுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண், ஒருசைபர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்த எண்ணை முடக்கப்போவதாகவும் அல்லது அந்த செல்போன் எண்ணை வைத்திருப்பவரை உடனடியாகக் கைது செய்யப்போவதாகவும் அறிவிப்பார்கள். இது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், எண் 9-ஐ அழுத்தவும் என்று அந்த குரல் பதிவு கூறும். 9ஐ அழுத்தினால், மோசடியாளர்களின் கால் சென்டரில் வேலை செய்யும் ஒருவர் உங்களை மிரட்டும் தொனியில் பேசுவார்.

அது உண்மையல்ல என்று, சொல்லும்பட்சத்தில், அவரிடம் அதிகாரிகள் போல ஏமாற்றும் மோசடியாளர்கள் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இவ்வாறு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் உண்டு. 9ஐ அழுத்திவிட்டு, அவர்கள் சொல்வதைக் கேட்டு அழைப்பை நிராகரித்து, மோசடியிலிருந்து தப்பியவர்களும் உண்டு.

இது பற்றி டிராய் என்ன சொல்கிறது என்றால்..

டிராய் அமைப்பு எச்சரிக்கைத் தகவல்களைத் தவிர்த்து ஒருபோதும் யாருக்கும் எந்த மின்னஞ்சலையோ, குறுந்தகவல்களையோ அனுப்பாது.

டிராய் அமைப்பிடமிருந்து எந்த தனிநபருக்கும் அழைப்புகள் வராது.

டிராய் அமைப்பு, ஒரு செல்போன் எண்ணை முடக்குவதாக யாருக்கும் அறிவுறுத்தாது.

எப்படி தப்பிப்பது?

தொலைபேசியில் அடையாளத்தை உறுதிப்படுத்த தனிப்பட்ட மற்றும் நிதிவிவரங்களை பகிர வேண்டாம்.

அரசு அல்லது ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து அழைப்பு என்று யார் சொன்னாலும் அதை நம்ப வேண்டாம்.

செல்போன் அழைப்பு மூலம் எதையும் உறுதி செய்ய வேண்டாம், தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.

சைபர் குற்றங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள், சந்தேகங்கள் மற்றும் புகாருக்கு அழையுங்கள் உதவி எண் 1930.

இதுபோன்ற சைபர் மோசடி குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். பண மோசடியாக இருப்பின், உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது எளிதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com