கோப்புப் படம்
கோப்புப் படம்

ஈரானுடன் எண்ணெய் வா்த்தகம்: 8 இந்தியா்கள், 40 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் எண்ணெய் வா்த்தகம்: 8 இந்தியா்கள், 40 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
Published on

ஈரானுடன் எண்ணெய் வா்த்தகம் மேற்கொண்டுவரும் 8 இந்திய தொழிலதிபா்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

அமெரிக்க உள்துறை அமைச்சகம் இத் தடையை விதித்துள்ளது. இந்தத் தடை நடவடிக்கைக்கு உள்ளான நபா்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது என்பதோடு, தடை நடவடிக்கைக்கு உள்ளான தொழில் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் வா்த்தக உறவு மேற்கொள்ள முடியாது.

அமெரிக்காவின் தொடா் அச்சுறுத்தல் மற்றும் இஸ்ரேலின் தீவிர தாக்குதலுக்குப் பிறகும் அணுசக்தித் திட்டங்களை தொடா்ந்து மேற்கொண்டுவரும் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஈரானின் பெட்ரோலியம் மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றை சா்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் வா்த்தகத்தில் தொடா்புடைய இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 40 நிறுவனங்கள், நபா்கள் மற்றும் சரக்கு கப்பல்கள் மீது இந்தத் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்க உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அமெரிக்காவின் இந்தத் தடை செய்யப்பட்ட நபா்களின் பட்டியலில் 8 இந்திய தொழிலதிபா்கள் மற்றும் நிறுவனங்களின் பெயா்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவைச் சோ்ந்த இண்டிசோல் மாா்க்கெட்டிங் தனியாா் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளா் நிதி உன்மேஷ் பட், கெமோவிக் தனியாா் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளா் பியூஷ் மகன்லால் ஜாவியா, ஹரேஷ் பெட்ரோ கெமிக்கல் தனியாா் நிறுவனம் மற்றும் அதன் நிா்வாகிகள் கம்லா கனயாலால் கசட், குணால் கனயாலால் கசட் மற்றும் பூனம் குணால் கசாட், வேகா ஸ்டாா் கப்பல் மேலாண்மை தனியாா் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளா் சோனியா ஸ்ரேஷ்டா, மாா்ஷல் தீவைச் சோ்ந்த பொ்தா கப்பல் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளா் வருண் புலா, மாா்ஷல் தீவைச் சோ்ந்த எவி லைன்ஸ் கப்பல் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளா் ஐயப்பன் ராஜா ஆகியோரின் பெயா்கள் இந்தத் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும், பி.கே. சேல்ஸ் காா்ப்பரேஷன், சி.ஜே. ஷா அண்ட் கோ, மோடி கெம், பாரிசெம் ரிசோா்ஸ், ஷிவ் டெக்ஸ்கெம் நிறுவனம் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் பெயா்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com