
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசும், பரிசுத்தொகையாக சுமார் ரூ.10 கோடியும் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான இலக்கியம், இயற்பியல், வேதியியல், அமைதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நோபல் பரிசுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், உலகளவில் 8 போர்களை நிறுத்தியுள்ளதாக மார்தட்டிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கனவுகளைத் தகர்க்கும் விதமாக அவருக்கு வழங்கப்படாமல், தென் அமெரிக்காவின் வெனிசுவேலாவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் பாஜகவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காக்கப் போராடும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் சுரேந்திர ராஜ்புத் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,
“அரசிலமைப்பைக் காக்கப் போராடியதற்காக வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரும் அரசியலமைப்பைக் காக்க போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.
அதேவேளையில், இந்தியாவில் சமீபகாலமாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பாஜகவின் சர்வாதிகார ஆட்சி எனக் கூறிவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆளும் அரசுக்கு எதிராக வாக்குத்திருட்டுக் குற்றச்சாட்டுகள், இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு, பிகார் வாக்காளர் சீர்திருத்த முறைகேடு உள்ளிட்டவற்றைக் வெளிக்கொண்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
மேலும், நாட்டில் நிலவும் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, சிறுபான்மையினர், பட்டியலின, பழங்குடியினருக்கான உரிமைகள் பரிக்கப்படுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.