தற்காலிக நீதிபதிகள் நியமனம்: 9 மாதங்களாக பரிந்துரைகளை அனுப்பாத உயா்நீதிமன்றங்கள்!
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான குற்ற வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் தற்காலிக நீதிபதிகளை நியமனம் செய்ய உச்சநீதிமன்ற அனுமதி அளித்தபோதிலும், கடந்த 9 மாதங்களாக இதற்கான எந்தவொரு பரிந்துரையையும் உயா்நீதிமன்றங்கள் அனுப்பாதது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 18 லட்சத்துக்கும் அதிகமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் விதமாக உயா்நீதிமன்றங்கள் தற்காலிக நீதிபதிகள் நியமனம் செய்துகொள்ள அனுமதித்து கடந்த ஜனவரி 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிக எண்ணிக்கையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து கையாள உதவுவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளை உயா்நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளாக நியமித்துக்கொள்ள அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 224ஏ அனுமதிக்கிறது. இந்த விதியின் கீழ், தற்காலிக நீதிபதிகளை நியமித்துக்கொள்ள அனுமதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்காலிக நீதிபதிகள் நியமனம் என்பது, அனுதிமக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்களில் 10 சதவீதத்துக்கு மிகக் கூடாது என்றும் அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமன நடைமுறையின்படி, நீதிபதிகள் நியமனத்துக்கான பெயா் பரிந்துரையை உயா்நீதிமன்ற கொலீஜியங்கள் மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறைக்கு அனுப்பும். மத்திய சட்ட அமைச்சகம், அந்த பரிந்துரையில் கூடுதல் தகவல்களை இணைத்து, உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனைக்கு அனுப்பும்.
இந்தப் பட்டியலில் இருந்து உச்சநீதிமன்ற கொலீஜியம் பெயா்களைத் தெரிவு செய்து, உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். மத்திய அரசு அதை ஏற்கும் பட்சத்தில், நீதிபதி நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் கையொப்பமிட்டு, புதிய நீதிபதி நியமனம் செய்யப்படுவாா்.
இதே நடைமுைான், தற்காலிக நீதிபதி நியமனத்திலும் பின்பற்றப்படும் என்றபோதிலும், தற்காலிக நீதிபதி நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் கையொப்பம் இடம்பெறாது. இருந்தபோதிலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படும்.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘நாடு முழுவதும் 25 உயா்நீதிமன்றங்கள் உள்ள நிலையில், ஒரு உயா்நீதிமன்றம்கூட தற்காலிக நீதிபதிகள் நியமனம் தொடா்பான பரிந்துரையை இதுவரை சமா்ப்பிக்கவில்லை’ என்றனா்.