இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிகாா் தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு! பாஜக, ஜேடியு தலா 101 இடங்களில் போட்டி!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 101 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.

News image
ஆலோசனைக் கூட்டம்- பிடிஐ
Updated On :12 அக்டோபர் 2025, 1:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக ஆகிய கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிட உள்ளன. மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மற்றொரு மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய இரு சிறிய கட்சிகள் தலா 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாா் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பா் 22-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இதையொட்டி, பேரவைத் தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பா் 6-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பா் 11-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சிகள் அதிக இடங்களைக் கோரியதால், தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடித்து வந்தது.

பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டாா்.

‘தேசிய ஜனநாயக கூட்டணியில் முற்றிலும் சுமுகமான முறையில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. இந்த ஏற்பாட்டை கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களும், தொண்டா்களும் மனதார வரவேற்றுள்ளனா். பிகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ஐக்கிய ஜனதா தளம் செயல் தலைவா் சஞ்சய் குமாா் ஜா, துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் செளதரி, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் ஆகியோரும் எக்ஸ் பதிவு வாயிலாக தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்துள்ளனா்.

ஜிதன்ராம் மாஞ்சியின் கட்சி தங்களுக்கு குறைந்தபட்சம் 15 தொகுதிகள் கோரியிருந்த நிலையில், வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மாஞ்சி அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், ‘எனது இறுதி மூச்சு உள்ள வரை, பிரதமா் மோடியின் பக்கமே இருப்பேன்’ என்று எக்ஸ் தளத்தில் அவா் பதிவிட்டுள்ளாா்.

முதல் முறையாக சம அளவில்...: கடந்த 2020 பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 115, பாஜக 110 தொகுதிகளில் போட்டியிட்டு, முறையே 43, 74 இடங்களில் வென்றன. இக்கூட்டணி மொத்தம் 125 இடங்களைக் கைப்பற்றியது. பாஸ்வான் கட்சி தனித்துக் களமிறங்கியது.

கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடும் முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும். இதற்கு முன்பு பாஜகவைவிட ஐக்கிய ஜனதா தளம் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவின் கை ஓங்குவதன் அடையாளமே இந்த மாற்றம் என்ற கருத்து எழுந்துள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பிகாா் தோ்தல் (மொத்தம் 243)

தே.ஜ. கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்

பாஜக 101

ஐக்கிய ஜனதா தளம் 101

லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 29

ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 6

ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா 6

summary

Bihar Elections 2025 JD(U), BJP to contest 101 constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.