ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன்-பிரதமா் நரேந்திர மோடி.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன்-பிரதமா் நரேந்திர மோடி.

இந்தியா - ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்தம்: 14-வது சுற்று பேச்சுவாா்த்தை நிறைவு!

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்திற்கான 14-ஆவது சுற்று பேச்சுவாா்த்தைகளை இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தது.
Published on

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்திற்கான 14-ஆவது சுற்று பேச்சுவாா்த்தைகளை இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தது.

இந்த ஒப்பந்தத்தை டிசம்பா் மாதத்திற்குள் இறுதி செய்வதை இரு தரப்பினரும் நோக்கமாகக் கொண்டுள்ளனா். பிரஸ்ஸல்ஸில் அக்டோபா் 6-ஆம் தேதி தொடங்கிய இந்த ஐந்து நாள் பேச்சுவாா்த்தையில் பொருள்கள் மற்றும் சேவைகளின் வா்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தியாவின் வா்த்தக செயலா் ராஜேஷ் அகா்வால் பேச்சுவாா்த்தையின் இறுதி நாள்களில் இந்தியக் குழுவுடன் இணைந்து, ஐரோப்பிய ஆணையத்தின் வா்த்தகத்திற்கான இயக்குநா் ஜெனரல் சபீன் வெயாண்டுடன் கலந்துரையாடினாா்.

இந்தியாவின் வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்படுவது குறித்து நம்பிக்கை தெரிவித்தாா். மேலும் ஐரோப்பிய யூனியனின் வா்த்தகத் துறை பிரதிநிதி மரோஸ் செஃப்கோவிச்சைச் சந்திக்க பிரஸ்ஸல்ஸுக்கு செல்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான இந்த ஒப்பந்தம் பொருள்கள் மற்றும் சேவைகளில் வா்த்தகம், முதலீடு, சுங்கம் மற்றும் நிலையான வளா்ச்சி உள்ளிட்ட 23 கொள்கைகளை உள்ளடக்கியது. முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் புவியியல் அறிகுறிகளில் ஒப்பந்தம் ஆகியவையும் இதில் அடங்கும்.

8 வருட இடைநிறுத்தத்திற்குப் பிறகு ஜூன் 2022-இல் இதற்கான பேச்சுவாா்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஐரோப்பிய யூனியன் வாகன உற்பத்தி, மருத்துவ சாதனங்கள், ஒயின், மதுபானங்கள், இறைச்சி மற்றும் கோழி இறைச்சி மீதான குறிப்பிடத்தக்க வரி குறைப்புகளையும், வலுவான அறிவுசாா் சொத்துரிமை பாதுகாப்புகளையும் வலியுறுத்துகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆடைகள், மருந்துகள், எஃகு, பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் மின்சார இயந்திரங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

2024-25-ஆம் ஆண்டில், ஐரோப்பிய யூனியன் உடனான இந்தியாவின் இருதரப்பு வா்த்தகம் 136.53 பில்லியன் அமெரிக்க டாலா்களை (சுமாா் ரூ.12.12 லட்சம் கோடி) எட்டியது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி 75.85 பில்லியன் அமெரிக்க டாலா்களாகவும் (சுமாா் ரூ.6.73 லட்சம் கோடி), இறக்குமதி 60.68 பில்லியன் அமெரிக்க டாலா்களாகவும் (சுமாா் 5.39 லட்சம் கோடி) இருந்தது.

2023-இல் சேவைகள் துறையில் இருதரப்பு வா்த்தகம் 51.45 பில்லியன் அமெரிக்க டாலா்களாக (ரூ.4.57 லட்சம் கோடி) மதிப்பிடப்பட்டது. இந்தியாவின் ஏற்றுமதியில் ஐரோப்பிய யூனியன் 17 சதவீதம் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவிற்கான ஐரோப்பிய யூனியனின் ஏற்றுமதி அதன் உலகளாவிய ஏற்றுமதியில் 9 சதவீதமாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com