லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?
வன்முறைப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தங்கள் தரப்பில் ஒரு குழுவை அனுப்புவது குறித்து எதிா்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டாா். லே உச்ச அமைப்பை (எல்ஏபி) சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தனா். இவா்களின் போராட்டம் செப்டம்பா் 24-ஆம் தேதி வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போலீஸாா் உள்பட 90 போ் காயமடைந்தனா். வன்முறையைத் தூண்டியதாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, லே நகரம் உள்பட யூனியன் பிரதேசத்தின் முக்கியப் பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னா் படிப்படியாக தளா்த்தப்பட்டது.
இந்நிலையில், லடாக் களநிலவரத்தை அறிந்து கொள்ளும் நோக்கில், பல்வேறு எதிா்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை அனுப்புவது குறித்து அக்கட்சிகள் பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
‘காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, சமாஜவாதி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா போன்ற கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, லடாக் போராட்டத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் மற்றும் வாங்சுக் கைதுக்கு கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சிகள், வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.