
9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகிவிட்டது என்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.
தேசிய குற்றப் பதிவேடுகள் முகமையின்(என்சிஆர்பி) கடந்த 2023-ஆம் ஆண்டு அறிக்கையிலுள்ள தரவுகளின்படி, இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரிப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2023-இல் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 29,670 என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
2023-இல் பதிவான குற்றச்செயல்களின் தரவுகளை ஆராயும்போது, உத்தரப் பிரதேசம் 20-ஆவது இடத்தில் உள்ளது. பெண்களை பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொலை வழக்குகள் நாட்டில் மொத்தம் 230 பதிவாகியுள்ளன.
அதில் முதல் இடம் வகிப்பது உத்தரப் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு 2023-இல் இவ்வகை வழக்குகள் மொத்தம் 33 பதிவாகி உள்ளன. அதற்கடுத்த இடங்களில் பஜக ஆளும் மத்திய பிரதேசமும் மகராஷ்டிரமும் உள்ளன.
இந்த நிலையில், சமாஜவாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் லக்னௌ நகரில் இன்று(அக். 12) செய்தியாளர்களுடன் பேசியதாவது, “பாஜகவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேசிய குற்றப் பதிவேடுகள் முகமை (என்சிஆர்பி) தரவுகளின்படி, பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், பாஜக அதன் தோல்வியை மூடிமறைக்க விரும்புகிறது.
உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அநீதியும் கொடுஞ்செயல்களும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இங்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல். உத்தரப் பிரதேச மக்களுக்கு வசதிகளையும் உதவியையும் வழங்க வேண்டிய அரசுத் துறைகள், இவர்களின் 9 ஆண்டுகால ஆட்சியில் ஊழலில் ஊறிப் போயுள்ளன” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.