
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 10 பெண் சாதனையாளர்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், அக். 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேவி விருதுகள் - 2025 விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான வி. ராமசுப்பிரமணியன், பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், தெலங்கானா உறைவிட ஆசிரியர் டி. கல்யாண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
விருது பெற்றவர்கள்
திரைப்பட தயாரிப்பாளர் எலாஹே ஹிப்டூலா, வழக்குரைஞர் ஸ்ரேயா பரோப்காரி, விஞ்ஞானி ரஷ்னா பண்டாரி, தொழிலதிபர்கள் சரஸ்வதி மல்லுவலசா மற்றும் அனு ஆச்சார்யா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும், ஓவியர் அஞ்சனி ரெட்டி, அறுவை சிகிச்சை நிபுணர் பலுகுரி லட்சுமி, வடிவமைப்பாளர் மிருணாளினி ராவ், கலாக்ரிதி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ரேகா லஹோடி மற்றும் புதுமையாளர் தல்லூரி பல்லவி ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பெண்களுக்கு தடையாக இருக்கக் கூடாது!
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் பேசியதாவது:
“இந்த விழாவில் பங்கேற்க இரண்டு காரணங்களுக்காக நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன். முதலாவது, இன்றும் ஊடக நெறிகளைப் பின்பற்றும் ஊடக நிறுவனமாக ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளது. இரண்டாவது, இந்த நிறுவனத்தின் தமிழ்ப் பத்திரிகையான தினமணி, தீர்ப்புகளைத் தவிர வேறு விஷயங்களையும் எழுதுபவராக என்னை மாற்றியது. நான் நீதிமன்றத்தில் தீர்ப்புகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால், தினமணி என்னை தமிழ் எழுத்தாளராக மாற்றியது.” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் பல முன்னணி நிதி நிறுவனங்கள் பெண்களால் வழிநடத்தப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி பேசிய அவர்,
”நாம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம், ஆனால், இன்னும் பெரும் தொலைவு செல்ல வேண்டியுள்ளது. பெண்கள் வீட்டிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக, நான் ஒவ்வொரு நாளும் காண்கிறேன். பெண்களை மதிப்பது பொறுப்புள்ள குடிமக்களின் கடமை. அவர்களின் முன்னேற்றத்திற்கு நாம் நேரடியாக பங்களிக்க முடியாவிட்டாலும், தடைகளாக இருக்கக் கூடாது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.