
பண்டிகைக் காலத்தில், எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியிருந்த சூழ்நிலையில், கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வந்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கி தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு 2025-30-ஆம் ஆண்டுக்கான டேங்கா் லாரிகள் ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், 3,500 லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றிருந்த நிலையில், 2,800 லாரிகளுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் அங்கீகார கடிதம் வழங்கின. மீதமுள்ள 700 டேங்கா் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, கடந்த வியாழக்கிழமை முதல் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தன.
எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம், அக்டோபர் 2025 முதல் 2026 பிப்ரவரி வரை கையெழுத்திடப்பட்டிருந்தது. ஆனால், பெரும் தொகையை முதலீடு செய்து, டேங்கர் லாரிகளை வாங்கியிருப்பதாகவும், இதனை வேறு பணிகளுக்குப் பயன்படுத்த முடியாது என்பதால், ஓராண்டுக்கு ஒப்பந்தத்தை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
டேங்கர் லாரிகளின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில், தற்காலிகமாக 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒப்பந்தத்தை நீட்டிக்க பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்படுவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
இதையும் படிக்க... எஸ்பிஐ வெகுமதி புள்ளிகள் என்ற பெயரில் எஸ்எம்எஸ்! ஏமாற வேண்டாம்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.