
கிராமம் என்றால், மண் வீடுகளும், விவசாய நிலங்களும்தான் இருக்கும், வேறென்ன என்று நினைப்பவர்களுக்கு, ஒரு கிராமத்தைச் சுற்றி இருக்கும் வங்கிகளில் ரூ.5,000 கோடி அளவுக்கு முதலீடு செய்திருக்கும் பணக்கார கிராமத்தைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உலகிலேயே மிகப் பணக்கார கிராமமாக அறியப்படும் அந்த கிராமம், சுவிட்சர்லாந்திலோ, லண்டனிலோ இல்லை. நம்ம இந்தியாவில்தான் இருக்கிறது. குஜராத் மாநிலம் மாதாப்பர்தான் அந்த கிராமம்.
குஜராத்தின் கட்ச் பகுதியில், கிராமத்தின் அடையாளங்கள் எதையும் கொண்டிருக்காமல், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மிக வளர்ச்சியடைந்த நவநாகரிகக் குடும்பங்களைக் கொண்டிருக்கிறது மாதாப்பர்.
இவர்கள் ஏதோ திடீரென வைரம் வெட்டியெடுத்து பணக்காரர்களாகிவிடவில்லையாம். பல ஆண்டுகாலமாக இங்கு நன்கு படித்தவர்கள், வெளிநாடுகளில் வேலை செய்து, ஈட்டும் சம்பளத்தை, சொந்த ஊருக்கும், சொந்த மக்களுக்கும் அனுப்பி, தாங்கள் மட்டும் உயராமல், தங்கள் ஒட்டுமொத்த கிராமமும் வளர்ச்சியடைய வழியேற்படுத்தியிருக்கிறார்களாம்.
வங்கி முதலீடுகளைப் பட்டியலிட்டு, அதன் மூலம் நாட்டின் பணக்கார கிராமங்களை வரிசைப்படுத்தினால், இந்த மாதாப்பர்தான் முதலிடம் பிடிக்குமாம். இங்கு சுமார் 7600 குடும்பங்கள் வாழ்கின்றன. 17 வங்கிக் கிளைகள் உள்ளன. இங்கு மட்டும் ரூ.5,000 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்படிக் கணக்கிட்டால், சராசரியாக இங்கு ஒருவர் தலா ரூ.15 லட்சம் முதலீடு செய்திருக்கிறார் என்கின்றன தரவுகள்.
இங்கிருக்கும் குடும்பங்களில் ஒருவர் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆப்ரிக்கா, அரபு நாடுகளில் வாழ்ந்து, தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
அங்கிருந்து, கிராமத்தில் உள்ளவர்களின் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்புகள் மற்றும் சமுதாய முன்னேற்றத்துக்காக பணம் அனுப்புகிறார்கள்.
இதனால், அந்தக் கிராமத்தில் நல்லதரமான பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், ஏரி, அணை என அனைத்தும் அமைந்திருக்கிறது.
நகரப் பகுதிகளில்கூட காண முடியாத பல நவீன வசதிகள் இந்த கிராமத்தில் இடம்பெற்றுள்ளன. எனவே, கல்வி மற்றும் அதனால் கிடைத்த வேலை வாய்ப்பைக் கொண்டு தாங்கள் மட்டும் உயராமல், தங்களது ஒட்டுமொத்த கிராமத்தையும் உயர்த்தியிருக்கிறார்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள்.
இதையும் படிக்க.. எஸ்பிஐ வெகுமதி புள்ளிகள் என்ற பெயரில் எஸ்எம்எஸ்! ஏமாற வேண்டாம்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.