கேரளத்தில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் பள்ளியில் மாணவி ஹிஜாப் அணியத் தடை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், எர்ணாக்குளம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் நடத்திவரும் கத்தோலிக்க பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், ``தான் ஹிஜாப் அணிந்திருந்ததால், தன்னை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை என்றும், தன்னிடம் ஆசிரியர்கள் மோசமாக நடந்துகொண்டதால், இனி இங்கு படிக்க மாட்டேன்’’ என்று தனது பெற்றோரிடம் முறையிட்டார்.
பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் இடையில் தொடங்கிய இந்தத் தகராறு, பெற்றோர் - ஆசிரியர் கழகம் (PTA) வரையில் சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பிடிஏ தலைவர் ஜோஷி கூறுகையில், ``கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனத்தின் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்’’ என்று தெரிவித்தார். மேலும், இஸ்லாமிய சார்பு மற்றும் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா-வுடன் தொடர்புடைய இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) ஆதரவுடன் சிறுமியின் பெற்றோர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
``இந்தச் சம்பவத்தின் பின்னணியில் எஸ்டிபிஐ கட்சி இருக்கிறது. அவர்கள்தான் காரணம். சிறுமியின் பெற்றோரைவிட அவர்கள்தான் அதிக அழுத்தம் கொடுத்தனர்’’ என்று ஜோஷி கூறினார்.
இந்தச் சம்பவத்தையடுத்து, போலீஸ் பாதுகாப்புக்காக கேரள உயர்நீதிமன்றத்தை பள்ளி நிர்வாகம் அணுகியது. மேலும், பள்ளிக்கு இரு நாள்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 7-ல் ஹிஜாப் அணிந்துசென்ற சிறுமியை அனுமதிக்காத நிலையில், மீண்டும் 3 நாள்கள் கழித்தும் அதேபோல அனுமதிக்காததால் சிறுமி முறையிட்டுள்ளார்.
4 மாதங்கள் வரையில் சிறுமி, பாரம்பரிய அளவில் ஹிஜாப் அணியவில்லை என்றாலும், ஹிஜாப் போலவே துப்பட்டாவை தலையில் அணிந்து சென்றார் என்று சிறுமியின் தந்தை கூறினார்.
இதுகுறித்து, பள்ளி முதல்வர் கூறுகையில், ``மாணவர் சேர்க்கையின்போது, அனைத்து பெற்றோர்களிடத்தும் ஆடைக் குறியீடு குறித்து கூறப்படும். அந்தச் சிறுமியும் 4 மாதங்கள் ஆடைக் குறியீட்டைப் பின்பற்றினார். ஆனால், தற்போது ஆடைக் குறியீட்டை மீறியுள்ளார்’’ என்று தெரிவித்தார்.
இதனிடையே, சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்த பாஜகவும், ``இந்தச் சம்பவம் மாநிலத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பைச் சேதப்படுத்துகிறது. ஒரு பெண் ஹிஜாப் அணிவதில் எந்தத் தவறும் இல்லை.
பள்ளியில் படிக்கும் 117 முஸ்லீம் பெண்கள், ஆடைக் குறியீட்டைக் கேட்டு, கட்டுப்படுகிறார்கள். ஆனால், இந்தச் சம்பவத்துக்கு பயந்து பள்ளி மூடப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: இரவில் திருமணம், விடியலில் கொள்ளை! மணமகள் கொள்ளை கும்பல் கொடுத்த அதிர்ச்சி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.