
இரவில் திருமணம் நடைபெற்ற நிலையில், அதிகாலையில் கண்விழித்துப் பார்த்தால், பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு, மணமகளையும் காணவில்லை என்று மணமகன் வீட்டார் தேடும் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் நடந்துள்ளது.
ஒன்றல்ல இரண்டல்ல, பத்துக்கும் மேற்பட்ட சம்பவங்களில், திருமணம் முடிந்த மறுநாள், விடிந்து பார்த்தால், மணமகன் வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு மணமகள் ஓட்டம்பிடிக்கும் சம்பவங்கள் பதிவாகியிருக்கிறது.
குடும்பப் பெண்கள் என நினைத்து, ஓட்டம்பிடிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த பெண்களை திருமணம் முடிக்கும் மணமகன்களுடைய நிலைமையை வார்த்தையால் புரிய வைக்க முடியாது.
ஓரிருவர், இதுபோன்ற திருமணம் என்ற பெயரில் பணத்தைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்தேறி வந்த நிலையில், இந்த மோசடியில் ஒரு கும்பலே களமிறங்கியிருக்கிறது என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் குப்தா என்பவர்தான் இந்த கும்பலை நடத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல், மணமக்களுக்கு மணமகளைத் தேடித் தரவும் ரூ.1.25 லட்சம் கட்டணமாகப் பெற்றுள்ளார். கொள்ளைக் கும்பலை தலையில் கட்டி வைக்க கட்டணம் வேறு மணமகன் குடும்பத்தார் கொடுத்திருக்கிறார்கள்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் புகார் கொடுத்திருக்கும் நிலையில், அப்பகுதி மேயர் இது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.
சமூக ஊடகங்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாக மணமகள்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது திருமணம் சிறிய கோயில்கள், வீடுகள், மண்டபங்களில் நடக்கிறது. மணமகன் வீட்டுக்கு மணமகள் வருகிறார். மறுநாள் காலையில், எழுந்து பார்த்தால், வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு மணமகள் ஓடிவிடுகிறார்கள்.
அண்மையில், அலிகாரின் அண்டை கிராமத்தைச் சேர்ந்த பிரதீக் ஷர்மா என்ற இளைஞர், ஷோபா என்ற பெண்ணை திருமணம் செய்ததாகவும், கர்வா சௌத் அன்று, வீட்டில் உள்ளவர்களுக்கு மயக்க மருந்துகொடுத்துவிட்டு, ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.
இந்த மணமகளும் அதே கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்தான் என்றும், இவர்களது திருமணத்தையும் அதே முகேஷ் குப்தாதான் ஏற்பாடு செய்ததாகவும், மணமகள் பிகாரைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல கிராம இளைஞர்கள் இதுபோன்ற கும்பலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால், குடும்ப மரியாதை போய் விடும் என்பதால் காவல்நிலையங்களில் புகார் அளிக்காமல் இருப்பதாகவும், உடனடியாக அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற கும்பல் குறித்து மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.