பிகாரில் கைமீறிச் செல்லும் தொகுதிப் பங்கீடு! அக்.17 வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி...

பிகார் பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி...
படங்கள்: ஏஎன்ஐ
படங்கள்: ஏஎன்ஐ
Published on
Updated on
2 min read

பிகாரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமையே கடைசி நாள் என்ற நிலையில், தே.ஜ. கூட்டணியிலும், மகா கூட்டணியிலும் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்யாமல் உள்ளனர்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவ. 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் கட்டமாக 121 இடங்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் அக். 10 ஆம் தேதி தொடங்கியுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் அக். 17 வெள்ளிக்கிழமை ஆகும்.

தே.ஜ. கூட்டணியில் சலசலப்பு

வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாள்களே இருக்கும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தாலும், யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக மற்றும் ஜக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்தார்.

மேலும், அதிக இடங்களை எதிர்பார்த்த மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா ஆறு இடங்களிலும் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தே.ஜ. கூட்டணியில் முக்கியத் தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சோன்பர்சா, ராஜ்கிர் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தளம் வசமுள்ள பல்வேறு தொகுதிகளை சிராக் பாஸ்வான் கோரியுள்ளார்.

சோன்பர்சா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக பிகார் அமைச்சரும் நிதீஷ் குமாரின் நெருங்கிய நண்பருமான ரத்னேஷ் சதா இருக்கிறார். மேலும், சில நிர்வாகிகளுக்கு ஏற்கெனவே நிதீஷ் வாக்குறுதி கொடுத்துவிட்டதால், சிராக் பாஸ்வான் மற்றும் பாஜகவினர் கேட்கும் தொகுதிகளை விட்டுக்கொடுக்க நிதீஷ் தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஜெய் குமார் சிங்கின் தொகுதியை ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு தனது தொகுதியை விட்டுக் கொடுத்தால் கட்சியில் இருந்து வெளியேறி சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று ஜெய் குமார் சிங் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிகாரில் திங்கள்கிழமை மாலை நடைபெறவிருந்த தே.ஜ. கூட்டணித் தலைவர்களின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளத்தின் எம்பி சஞ்சய் ஜாவின் வீட்டுக்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், நித்யானந்த் ராய், பிகார் துணை முதல்வர் சாம்ராட் செளத்ரி மற்றும் மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இரவு 9 மணிவரை ஆலோசனை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதல்வர் நிதீஷ் குமார் இல்லத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

மகா கூட்டணியில் நீடிக்கும் இழுபறி

மகா கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பிகார் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் நெருக்கம் காட்டினாலும், தொகுதிப் பங்கீட்டில் கறார் காட்டி வருகிறார்.

இரு கட்சித் தலைவர்களும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நேற்று தில்லி சென்ற தேஜஸ்வி யாதவ், காங்கிரஸின் முக்கிய தலைவர்களுடன் பேசியுள்ளார்.

மேலும், திங்கள்கிழமை நள்ளிரவு வரை இரு கட்சித் தலைவர்களும் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

இதனிடையே, தொகுதிப் பங்கீடு முடிவதற்குள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் தீவிரம் காட்டி வருவதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

100 தொகுதிகள் வரை போட்டியிட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்த நிலையில், 61 முதல் 63 தொகுதிகளே ஒதுக்கீடு செய்ய ராஷ்டிரிய ஜனதா தளம் முன்வந்துள்ளது.

மேலும், காங்கிரஸின் கோட்டையாக இருக்கும் கஹல்கான், நர்கட்டியகஞ்ச், செயின்பூர், பச்வாரா உள்ளிட்ட தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்று கட்சித் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று இரவுக்குள் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகின்றது.

இதனிடையே, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, 116 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை இரண்டு கட்டமாக வெளியிட்டு தேர்தலுக்குத் தயாராகியுள்ளனர்.

அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 32 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். மகா கூட்டணியில் இணைவதற்கான ஓவைசியின் முயற்சி பலனளிக்காத நிலையில், 100 தொகுதிகள் வரை போட்டியிட முடிவு செய்துள்ளார்.

2020 தேர்தலில்...

கடந்த 2020 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 115, பாஜக 110 தொகுதிகளில் போட்டியிட்டது. சிராக் பாஸ்வான் கட்சி தனித்து 134 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதேபோல், மகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144, காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Bihar seat sharing not finalised: Last date for filing nominations is October 17

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com