விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடியில் சிக்கினார்! ரூ. 13 லட்சம் இழப்பு!!

மோசடிக்கு ஆளான எஸ்பிஐ வங்கி துணை மேலாளர் பற்றி..
Cyber Criminals Dupe SBI Deputy Manager Of Lakhs
கோப்புப்படம்ANI
Published on
Updated on
1 min read

சைபர் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடிக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் என முதலீடுகளில் அதிக லாபம் என்று கூறிதான் தற்போது அதிகளவில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. முதலீடுகள் என்பதால் இதன் மதிப்பும் அதிகமாகவே இருக்கிறது.

சைபர் பாதுகாப்பு குறித்து சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளும் இதுபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்திய ஸ்டேட் வங்கியின் துணை மேலாளர் ஒருவர், பங்குச்சந்தை முதலீட்டு மோசடியில் ரூ. 13 லட்சத்தை இழந்துள்ளார்.

தில்லியைச் சேர்ந்த தேஜ் பிரகாஷ் சர்மா என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

சர்மாவுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு வாட்ஸ்ஆப் அழைப்பு வந்துள்ளது. உரிமம் பெற்ற ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து திவ்யன்ஷி அகர்வால் என்பவர் பேசி தங்களது நிறுவனம் ஆர்பிஐ, செபி ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நம்ப வைத்து முதலீடு செய்ய வைத்துள்ளார். ஒரு சில வாரங்களில் அதிக லாபம் கிடைக்கும் 'சிறப்பு திட்டம்' என்றும் உறுதியளித்துள்ளார்.

இதை நம்பிய சர்மா, தனது மொத்த சேமிப்பு என 6 வங்கிக்கணக்குகளுக்கு ரூ. 13 லட்சம் அனுப்பியுள்ளார். சில நாள்களில் அந்த சிறப்புத் திட்டத்தில் இணைந்ததாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் அந்த நிறுவனத்தில் இருந்து எந்த தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

அதன்பின்னர் அவர் புகார் அளித்த நிலையில் அவர் அனுப்பிய வங்கிக்கணக்குகள் உடனடியாக முடக்கப்ட்டுள்ளன. அவரைத் தொடர்புகொண்ட எண்களும் 'எச்சரிக்கை எண்களில்' செய்யப்பட்டுள்ளன.

சர்மா அவர் வேலை செய்யும் வங்கியில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்று வாடிக்கையாளர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவரையே நம்ப வைத்து மோசடி கும்பல் பணத்தை ஏமாற்றியுள்ளது.

உங்களுடன் போனில் பேசுபவர்கள் தேவையான ஆவணங்களை அனுப்பி நீங்கள் நம்பும்படி பேசினாலும் உடனடியாக அதை நம்பி முதலீடு செய்யாமல் நன்கு அறிந்த ஒரு நிதி ஆலோசகரை தொடர்புகொண்டு விசாரித்த பின்னர் முடிவெடுப்பது நல்லது.

Summary

Cyber Criminals Dupe SBI Deputy Manager Of Lakhs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com