
நொய்டாவில் தகவல் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒரு தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பரிசுப் பொருள் வழங்கியுள்ள விடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகையாக தீபாவளி பார்க்கப்படுகிறது. தீபாவளியையொட்டி பல்வேறு நிறுவனங்களில் போனஸ், பரிசுப் பொருள்களாக ஒருமாதம் அல்லது இரண்டு மாத சம்பளம், இனிப்பு வகைகள், இன்னும் சில நிறுவனங்களில் வழக்கமாக சோன்பப்டியும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில்தான், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் தங்களது நிறுவனத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தீபாவளி பரிசு குறித்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
இந்த விடியோ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பலரும் தங்களது நிறுவனத்தின் மீதான விரக்தியை கருத்துகளாகவும், நக்கலாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த விடியோவில், விஐபிக்கள் பயன்படுத்தக் கூடிய பெரிய சூட்கேஸ் ஒன்று, சூட்கேஸுக்குள் மற்றொரு சிறிய சூட்கேஸ், தீபாவளி பண்டிகையை பிரதிபலிக்கும் விதமாக மின்கலனில் எரியக்கூடிய அகல்விளக்கு, உலர் பழவகைகள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டிருந்தன.
இதுகுறித்த விடியோக்கள் மிக வேகமாக இணையத்தில் வைரலான நிலையில், அந்த விடியோவில், “எங்க மேனேஜர் இந்த விடியோ-வ ஏஐ-னு சொல்றாரு பா..”, “சோன்பப்டிகூட கொடுக்கல புரோ..”, “ஏஐ - prompt இருந்தா கொடுங்க புரோ”, உங்க கம்பெனில போனஸ்-லாம் கொடுக்குறாங்கலா..” எனப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் 1995 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ‘இன்ஃபோ எட்ஜ்’ என்ற நிறுவனத்தில்தான் இந்தத் தீபாவளி பரிசுப் பொருள் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.85,000 கோடியை சொத்துமதிப்பாகக் கொண்டுள்ள சஞ்சீவ் பிக்சந்தானியின் அந்த நிறுவனம் ஐடி துறையில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் Naukri.com, 99acres.com, Jeevansathi.com மற்றும் Shiksha.com போன்ற முன்னணி ஆன்லைன் தளங்களையும் சொந்தமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.