
எத்தனை லட்சங்களில் சம்பளம் வந்தாலும், போதவில்லை என்று கடிகார முள்ளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு மக்கள் ஓடிக்கொண்டிருக்கையில், மாதம் கணவன் - மனைவி சேர்ந்து ரூ.2.1 லட்சம் சம்பாதித்தாலும் மாதக் கடைசியில் கையில் ஒன்றும் இருப்பதில்லை என்று ஐடி தம்பதி பகிர்ந்திருப்பது வைரலாகியிருக்கிறது.
இது பலருக்கும் எவ்வாற செலவிடுவது என்பது குறித்த புரிதலை ஏற்படுத்தலாம், அல்லது, சேமிப்பு, முதலீடு, கல்வி என செலவை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது குறித்து விளக்கம் கிடைக்கலாம் என்கிறார்கள் இந்தப் பதிவை படித்தவர்கள்.
ரெட்டிட் இணையத்தில் இவர்களது பதிவு இப்போது வைரலாகியிருக்கிறது. வீட்டு கடன் தவணை, கார் கடன் தவணை என பலரும் சிக்கிக்கொண்டு, சூழ்நிலைக் கைதிகளாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், இவர்களது பதிவு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கலாம்.
நான் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பாதித்தாலும்கூட, என்னால் சேமிக்க முடியவில்லை என்று தொடங்குகிறது அந்தப் பதிவு.
தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பெங்களூருவில் வாழ்ந்து வரும் பொறியாளர், மாதந்தோறும் ரூ.2.1 லட்சம் சம்பாதித்தாலும், அந்த மாதக் கடைசியில் மிகச் சொற்ப தொகைதான் கையிலிருக்கும் என்கிறார். ஆனால், பலரும் இணையத்தில் புலம்புவதைப் போல இவர் செய்யவில்லை.
அவர் தன்னுடைய மாதாந்திர செலவுக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாதம் வீட்டுக்கடனுக்கான கடன் தவணை ரூ.61,000. இன்னும் 44 தவணைகள் உள்ளன. தங்களது பிஎஃப், மகளுக்கான சேமிப்புத் திட்டத்துக்கு மாதம் ரூ.50 ஆயிரம், பிள்ளைகள் கல்விக் கட்டணம் மாதம் ரூ.14,000 ஆகிறது.
வீட்டுப் பணிப்பெண் ஊதியம் ரூ.3,000, சமையல் செய்பவருக்கு ரூ.4,000 இதில்லாமல் முதலீட்டுத் திட்டங்களுக்கு (எஸ்ஐபி) மாதம் ரூ.10,000 செலவிடுகிறோம்.
மளிகை, வெளியே சென்று சாப்பிடுவது, மின் கட்டணம் என ரூ.45,000 ஆகிறது. எரிபொருளுக்கு ரூ.4,000, இதர செலவுகள் மட்டும் ரூ.10,000. இப்படி அனைத்தும் போக, மாத இறுதியில் கையில் ரூ.10,000 முதல் ரூ.15,000 தான் இருக்கும். அதுவும் அந்த மாதத்தின் இறுதி எப்படி கழிகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்கிறார்கள்.
ஆனால், அவர்கள் தங்களது 40 வயதுக்குள் அனைத்து கடன் தவணைகளையும் முடித்து விட வேண்டும் என்றும், தங்களது பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். தற்போதைக்கு தாங்கள் வைத்திருக்கும் 10 ஆண்டுகள் பழமையான கார் சிறப்பாகவே இருக்கிறது. வீட்டுக் கடன் முடியும் வரை வேறெந்த பெரிய செலவுகளையும் மேற்கொள்ளக் கூடாது, வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் நோ சொல்லி விட்டார்களாம்.
அடுத்து, குடும்ப மருத்துவக் காப்பீடு, எஸ்ஐபி தொகையை மாதந்தோறும் அதிகரிப்பது, நீண்ட கால பங்குகளில் கவனம் செலுத்துவது போன்றவற்றிலும் ஈடுபட முயற்சித்து வருகிறார்களாம்.
இந்த பதிவுக்கு பலரும் பல விதமான கருத்துகளை பதிவிட்டிருக்கிறார்கள். இதுவரை இவர்கள் மருத்துவக் காப்பீடு எடுக்கவில்லையா என்றும், சிலர், வீடு வாங்கி ஒரு சில ஆண்டுகளில் தவணை நிறைவடையும் நிலையில் உள்ளது. பிள்ளைகள் படிப்பு என செலவை சமநிலையாக செய்து வருகிறார்கள் என்றும் பாராட்டியிருக்கிறார்கள்.
இதையும் படிக்க.. தேசிய விருது பார்சல்... பாராட்டுகளைப் பெறும் பசுபதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.