
நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள், கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் திருடன் என நினைத்து தவறுதலாக தாக்கப்பட்டதில் ஹரிஓம் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட ஹரிஓம் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்ற ராகுல் காந்தி, அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசியதாவது:
”சில நாள்களுக்கு முன், ஒரு தலித் அதிகாரி தற்கொலை செய்துகொண்டார். நான் அங்கு சென்றேன், இன்று இங்கு வந்துள்ளேன். இந்த குடும்பம் குற்றம் செய்யவில்லை, அவர்களுக்கு எதிராக குற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை குற்றவாளிகளைப் போன்று நடத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.
தனது மகன் கொல்லப்பட்டதற்கான நீதியை மட்டுமே கோருகின்றனர். கொலை செய்யப்பட்ட சம்பவம் விடியோவாக பதிவாகியிருக்கும் நிலையில், நீதியை கோருகிறார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அவர்களை மாநில அரசு முடக்கி வைத்திருப்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
நாடு முழுவதும் தலித்களுக்கு எதிராக அட்டூழியங்கள், கொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. நீதி வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை பாதுகாக்காமல், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று காலை, என்னை சந்திக்கக் கூடாது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அரசு அச்சுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் என்னைச் சந்திப்பதா? வேண்டாமா? என்பது முக்கியமல்ல, அவர்கள் குற்றம் செய்யவில்லை என்பதே முக்கியம். அவர்களை சந்தித்து அவர்கள் தரப்பு நியாயத்தைக் கேட்டேன். எங்களால் முடிந்த உதவியை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குச் செய்வோம். நாட்டில் தலித்களுக்கு எதிரான அட்டூழியங்கள் எங்கு நடந்தாலும், காங்கிரஸ் அங்கு நிற்கும். அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்கி, நீதிக்காகப் போராடுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.