
தீபாவளி நெருங்கும் நிலையில், பரிசுக் கூப்பன் விழுந்திருக்கிறது, பரிசு விழுந்திருக்கிறது என்ற பெயரில் அதிக மோசடிகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது என காவல்துறை எச்சரித்துள்ளது.
அதாவது, போலியான இ-வணிக இணையதளங்கள், ஏபிகே கோப்புகள், போலியான சமூக வலைத்தளப் பக்கங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, மக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து பிறகு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரிசு விழுந்திருக்கிறது
வழக்கமாக மோசடியாளர்கள் வாட்ஸ்ஆப் மூலம் ஒரு லிங்கு அனுப்புகிறார்கள். அதில் உங்களுக்கு தீபாவளி பரிசு விழுந்திருக்கிறது, இந்த கோப்புகளைத் திறந்து அதனை பெற்றுக் கொள்ளுங்கள் என வருகிறது. ஒருவேளை, அந்த ஏபிகே கோப்பை திறந்தால், அது உங்கள் செல்போனில் தகவல்களை திருடி, வங்கியிலிருந்து பணத்தையும் மோசடி செய்ய வழி வகுகிறதாம்.
செகுந்தராபாத்தில், 29 வயதான பெண்ணுக்கு, அவர் வழக்கமாக பொருள்கள் வாங்கும் ஒரு இணையதளத்தின் பெயரில் வாட்ஸ்ஆப் தகவல் வந்துள்ளது. அதில் தீபாவளி பரிசு பெற உங்கள் பெயர் தேர்வாகியிருக்கிறது, ஐஃபோன் 13 உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள். பிறகு, அந்த செல்போனைப் பெற வரி செலுத்த வேண்டும் என்று ஒரு சிறு தொகையை அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். பிறகு படிப்படியாக சிறு சிறு தொகையாக ரூ.1.40 லட்சம் வரை ஏமாந்தபிறகே அவர் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மற்றொரு சம்பவத்தில், ஒருவர், கூகுளில் சென்று தவறான வாடிக்கையாளர் சேவை மைய எண்ணைப் பெற்று அதனைத் தொடர்புகொண்டபோது, அதில் பேசிய மோசடியாளர் உதவிகளைப் பெற இந்த லிங்கைத் திறக்கவும் என்று வாட்ஸ்ஆப்பில் ஏபிகே செயலியை அனுப்பியிருக்கிறார்.
அதனை ஓபன் செய்தபோது, அந்த மால்வேர் அவரது செல்போனை ஒட்டுமொத்தமாக முடக்கி, அதிலிருந்து மோசடியாளர்கள் ரூ.1 லட்சத்தை பரிமாற்றம் செய்திருக்கிறார்கள்.
எனவே, எந்த விளம்பரத்தையும் பார்த்து மக்கள் ஏமாறக் கூடாது என்றும், தீபாவளிக்குப் பரிசு, கூப்பன் என்று தனிப்பட்ட தகவல்களை கேட்டால் யாரும் பகிர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.