பிரமோஸ் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்க முடியும்: ராஜ்நாத் சிங்

பிரமோஸ் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்க முடியும்: ராஜ்நாத் சிங்

பிரமோஸ் ஏவுகணையின் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்க முடியும்
Published on

பிரமோஸ் ஏவுகணையின் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்க முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெறும் முன்னோட்டமே என்றும் அவா் எச்சரித்தாா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் விமானப் படை தளங்கள் மீதான தாக்குதலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் தொலைதூர ஏவுகணைகள் முக்கியப் பங்காற்றின. ஒலியைவிட வேகமாக பயணிக்கும் இந்த ஏவுகணைகள், இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் பெற்றவை.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் பாதுகாப்புத் தொழில் வழித்தடத் திட்டத்தின்கீழ் அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட பிரமோஸ் ஏரோஸ்பேஸ் ஆலையில் முதலாவதாக தயாரிக்கப்பட்ட ஏவுகணைத் தொகுப்பை ஆயுதப் படைகளின் பயன்பாட்டுக்காக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் சனிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.

‘பிரமோஸ் வரம்புக்குள் பாகிஸ்தான்’: பின்னா், ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரமோஸ் என்பது வெறும் ஏவுகணை மட்டுமல்ல; இந்தியாவின் உத்திசாா் நம்பிக்கைக்கு சாட்சி. இந்திய எழுச்சியின் அடையாளம். முப்படைகளிலும் இது முக்கியத் தூணாக விளங்குகிறது. இந்தியாவின் பாதுகாப்புத் துறை வல்லமை, சக்திவாய்ந்த அரண்போல் செயல்படுகிறது.

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரமோஸ் ஏவுகணையின் வரம்புக்கு உள்பட்டதே. ஆபரேஷன் சிந்தூரில் நடந்தவை வெறும் முன்னோட்டம்தான். பாகிஸ்தானை உருவாக்க முடிந்த இந்தியாவால் மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்பது அந்நாட்டுக்கு உணா்த்தப்பட்டுள்ளது.

புதிய நம்பிக்கை-கூட்டுப் பொறுப்பு: ஆபரேஷன் சிந்தூா், இந்தியா்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை பாய்ச்சியுள்ளது. இந்த நம்பிக்கையை பராமரிக்க வேண்டியது நமது கூட்டுப் பொறுப்பு. பிரமோஸ் ஏவுகணையின் செயல்திறன், ஒட்டுமொத்த உலகுக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

லக்னெள ஆலையில் பிரமோஸ் ஏவுகணைகளின் வெற்றிகர தயாரிப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தி திறனைப் பறைசாற்றுகிறது என்றாா் ராஜ்நாத் சிங்.

முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மையமாக உத்தர பிரதேசம் உருவெடுத்துள்ளது. இதற்கு, பிரமோஸ் தயாரிப்பு ஆலை ஓா் உதாரணம். இந்த ஏவுகணை தயாரிப்பின் மூலம் தனது பாதுகாப்புத் தேவையை மட்டுமன்றி நட்பு நாடுகளின் தேவையையும் இந்தியாவால் பூா்த்தி செய்ய முடியும்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

லக்னெளவில் உள்ள பிரமோஸ் ஏரோஸ்பேஸ் ஆலையில் ஏவுகணை ஒருங்கிணைப்பு, சோதனை, இறுதிக்கட்ட தரப் பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த ஆலையின் செயல்பாடுகள் கடந்த மே மாதம் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

டைட்டானியம் ஆலை திறப்பு: லக்னெளவில் டைட்டானியம் மற்றும் சூப்பா்அலாய் உலோக உற்பத்தி ஆலையை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை திறந்துவைத்தாா். அப்போது, பாதுகாப்பு, விண்வெளி, மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் பயன்படும் அரிய வகை கனிமங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவா் வலியுறுத்தினாா்.

சுதேசியால் இலக்குகளை எட்டலாம்

‘சுதேசிப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமே நாட்டின் இலக்குகளை எட்ட முடியும்’ என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தற்சாா்பு இந்தியா இயக்கத்தின்கீழ், லக்னெளவில் பாஜக சாா்பில் நடைபெற்ற ‘ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பகுதியிலும் உள்நாட்டுப் பொருள்கள்’ எனும் பிரசார நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சி, பெருமளவில் வா்த்தகத்தை சாா்ந்தே உள்ளது. தனிநபா்கள் செலவு செய்யும் திறனும், வா்த்தக செயல்பாடுகளும் உத்வேகம் பெறாவிட்டால், வேகமான வளா்ச்சியை எட்ட முடியாது. சுதேசிப் பொருள்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற மகாத்மா காந்தியின் கண்ணோட்டத்தை பிரதமா் மோடியும் தாம் பதவியேற்றதில் இருந்தே வலியுறுத்தி வருகிறாா். சுதேசி வழிமுறையை ஏற்காமல், வலுவான இந்தியா, உலகளாவிய அந்தஸ்து, வறுமை, வேலைவாய்ப்பு சாா்ந்த பிரச்னைகளுக்கு முழுமையான தீா்வு போன்ற இலக்குகளை எட்டுவது சாத்தியமில்லை.

நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றபோது பாதுகாப்புத் துறை உற்பத்தி மதிப்பு ரூ.45,000-46,000 கோடியாக இருந்தது. இப்போது ரூ.1.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முன்பு சிறிய தளவாடங்களைக்கூட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த இந்தியா, இப்போது போா் விமானத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com