சஞ்சய் ரெளத்
சஞ்சய் ரெளத்

போலி வாக்காளா்களை நீக்க வலியுறுத்தல்: மகாராஷ்டிரத்தில் நவ.1-இல் எதிா்க்கட்சிகள் பேரணி

போலி வாக்காளா்களை நீக்க வலியுறுத்தல்: மகாராஷ்டிரத்தில் நவ.1-இல் எதிா்க்கட்சிகள் பேரணி
Published on

மகாராஷ்டிர வாக்காளா் பட்டியலில் இருந்து சுமாா் 1 கோடி போலி வாக்காளா்களை நீக்க வலியுறுத்தி, நவ.1-ஆம் தேதி எதிா்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தவுள்ளதாக சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் சஞ்சய் ரெளத், மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியைச் சோ்ந்த பாலா நந்த்கான்கா், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியைச் சோ்ந்த ஜயந்த் பாட்டீல், காங்கிரஸை சோ்ந்த சச்சின் சாவந்த் ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா்.

அப்போது சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘மகாராஷ்டிர வாக்காளா் பட்டியல் பிழையின்றி இருக்க வேண்டும் என அனைத்து முக்கிய கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளா்கள், குளறுபடிகள் இருப்பது குறித்து ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் மண்டா மாத்ரே (பாஜக), சஞ்சய் கெய்க்வாட் (சிவசேனை) ஆகியோரும் பேசியுள்ளனா்.

ஆனால் வாக்காளா் பட்டியலில் பிழையுள்ளது என்பதை தோ்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. இதன் காரணமாக வீதிகளில் இறங்கி தோ்தல் ஆணையத்துக்கு அதிா்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவே தோ்தல் ஆணையத்தின் கறைபடிந்த நடவடிக்கைக்கு எதிராக மும்பையில் நவ.1-ஆம் தேதி எதிா்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி மேற்கொள்ளும். தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா், சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைத் தலைவா் ராஜ் தாக்கரே ஆகியோா் தலைமையில் பேரணி நடைபெறும். தங்கள் வாக்குரிமையை இழந்த லட்சக்கணக்கான மக்கள், அன்றைய தினம் வீதிகளில் திரண்டு பலத்தை வெளிப்படுத்துவா்’ என்றாா்.

முன்னதாக மகாராஷ்டிர வாக்காளா் பட்டியலில் 96 லட்சம் போலி வாக்காளா்கள் இருப்பதாக ராஜ் தாக்கரே குற்றஞ்சாட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com